இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கிரிக்கெட் தொடர்களுக்காகச் செல்லும்போது, நடுவர்களின் தீர்ப்புகளும் மத்தியஸ்தர்களின் முடிவுகளும்,
கீழைத்தேய நாடுகளுக்கு எதிராகவே கிடைக்குமென்பது, முன்பிருந்த எதிர்பார்ப்பு. முன்னைய காலங்களில், சர்வதேச கிரிக்கெட் சபையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், அவற்றுக்குச் சார்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்ததோடு, மூன்றாம் நாடொன்றைச் சேர்ந்த நடுவர்கள், கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பாரபட்சமென்பது குறைவடைந்துவந்தது.
இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்குச் சென்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில், கௌஷால் சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்புத் தொடர்பில் சர்ச்சையேற்பட்டது. எனினும், நடுவரின் தீர்ப்புச் சரியானது என, இலங்கை அணியின் பயிற்றுநர் கிரஹம் போர்ட், தற்போது தெரிவிக்கிறார். ஆனால், நுவான் பிரதீப்புக்கு நடந்தது?
46ஆவது ஓவரை நுவான் பிரதீப் பந்துவீச ஆரம்பித்தபோது, இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களுடன் காணப்பட்டது. முதல் இனிங்ஸில் 128 ஓட்டங்களால் முன்னிலை வகித்த அவ்வணி, 260 ஓட்டங்களால் முன்னிலை வகித்திருந்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், 58 ஓட்டங்களுடன் காணப்பட்டார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில், அலெக்ஸ் ஹேல்ஸ், போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். பந்து விக்கெட்டைச் சரிக்கும் போதே, அந்தப் பந்து முறையற்ற பந்து (நோ போல்) என, நடுவர் றொட் டக்கர் அறிவித்தார். அதன் காரணமாக, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காததோடு, விக்கெட்டில் பட்டு அப்பந்து சென்ற பின்னர், இங்கிலாந்து அணிக்கு 3 ஓட்டங்கள் மேலதிகமாகவும் கிடைத்தன.
அதன் பின்னர் ஹேல்ஸ், 36 ஓட்டங்களைப் பெற்றார். முக்கியமாக, வெறுமனே 12 ஓட்டங்களாக 6ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் காணப்பட்ட நிலையில், மேலதிகமாக 70 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன. அப்போட்டியில் இலங்கை அணி பின்தங்கியிருந்தது உண்மை என்ற போதிலும், அந்த முறையற்ற பந்து, இலங்கையின் வாய்ப்புகளுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, 8ஆவது ஓவரில், நுவான் பிரதீப் பந்துவீசியிருந்த போது, அதே றொட் டக்கர், தவறான முறையில் முறையற்ற பந்தென, ஒரு பந்தைத் தெரிவித்திருந்தார். இப்போட்டியில், அதற்கு முன்னரும் பின்னரும், இலங்கை வீரர்கள் வீசிய முறையற்ற பந்துகளை, நடுவர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். ஆனால், ஆகக்குறைந்தது இரண்டு தடவைகள், தவறான முறையில் முறையற்ற பந்தென அழைத்திருந்தனர். அதிலொரு தடவை, இலங்கை அணி அதிகமாகப் பாதிக்கப்பட்டது.
அப்பந்தை, முறையற்ற பந்து என அழைக்காமல் விட்டிருந்தால், ஹேல்ஸ் ஆட்டமிழந்த பின்னர், மூன்றாவது நடுவரின் துணையோடு, அது முறையற்ற பந்தா என, நடுவரால் தீர்மானித்திருந்திருக்க முடியும். ஆனால், முறையற்ற பந்து என அறிவித்த பின்னர், அதை மாற்ற முடியாது. அதுவே, தற்போது காணப்படும் விதி. ஏனெனில், ‘முறையற்ற பந்து என அழைத்தமையின் காரணமாகவே நான் பொறுப்பின்றி ஆடி, ஆட்டமிழந்தேன்” எனத் துடுப்பாட்ட வீரர் சொல்வாராயின், அதற்குப் பின் ஒன்றும் செய்ய முடியாது.
முறையற்ற பந்துகளை நடுவர்கள் குறிப்பிடுவதில்லை என்பது ஒரு பக்க விமர்சனமாக இருக்க, இவ்வாறு தவறான முறையில் முறையற்ற பந்துகளை அழைப்பது, மற்றொரு முக்கியமான விடயம். இதற்கு முன்னரும் கூட, இவ்வாண்டு நியூசிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலியாவின் அடம் வோஜஸ், இவ்வாறு தப்பியிருந்தார். டக் பிரேஸ்வெல் வீசிய பந்தை, நடுவர் றிச்சர்ட் இலிங்வேர்த், தவறாக முறையற்ற பந்தென அழைத்திருந்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தான், முறையற்ற பந்துகள் தொடர்பில் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வியை எழுப்புகின்றன. தெரிவிக்கப்படும் முதலாவது ஆலோசனை என்னவெனில், முறையற்ற பந்துகளை அழைப்பதை, கள நடுவர்களிடமிருந்து முற்றாகப் பறித்து, மூன்றாவது நடுவரிடம் வழங்குவதாகும். இது, தவறான அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதைப் பெருமளவுக்குக் குறைக்கும். எனினும், இம்முறை போட்டியில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்.
மறுபுறத்தில், யதார்த்தகரமானதாக, தெளிவாகத் தெரியும் முறையற்ற பந்துகளை நடுவர்கள் அழைப்பதோடு, விக்கெட் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்னர், மூன்றாவது நடுவர் அதை உறுதிசெய்யும் நடைமுறையைப் பின்பற்றமுடியும். இதன் மூலம், தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமென்பதோடு, போட்டியில் ஆகக்கூடுதலான தாமதம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்