ஐசிசி இன் மாதாந்த சிறந்த வீரர்கள் பரிந்துரையில் பிரபாத் ஜயசூரிய

264

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று (03) வெளியிட்டது.

அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியானது பிரபாத்தின் 7ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்ததுடன், குறித்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

டில்ருவன் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளைப் பூர்த்திசெய்தன் மூலம் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய முன்னைய இலங்கை வீரர்களாக இருந்தனர்.

முன்னதாக 2022ஆம் ஆண்டு ஜுலை மாதமும் ஐசிசி இன் மாதாந்த சிறந்த வீரருக்கான பரிந்துரையிலும் பிரபாத் ஜயசூரிய இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்பட்டியலில் பிரபாத் ஜயசூரியவிற்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் ஸமான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது நடைபெற்று வருகின்ற நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது மற்றும் 2ஆவது ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேநேரம், பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஒரு சதம் மற்றும் 2 அரைச் சதங்களைக் குவித்த நியூசிலாந்து வீரர் மார்க் செப்மன், ஐசிசி இன் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மூன்று வீரர்களில் ஒரு வீரரை வாக்கெடுப்பின் அடிப்படையில், ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக ஐசிசி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<