அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்டியிருக்கின்றனர்.
அந்தவகையில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையினை நோக்கும் போது இலங்கை டெஸ்ட் அணியின் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்திய பந்துவீச்சுப் பெறுதியினை அடுத்து புதிய டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் ஒன்றினைக் காண்பித்திருக்கின்றார்.
இலங்கை அணி ஒரே இன்னிங்ஸில் நான்கு சதங்கள் பெற்ற போட்டிகள்
காலியில் நேற்று (18) நடைபற்று முடிந்த இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்ததோடு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்தது.
இப்போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமான ஒருவராக இருந்த பிரபாத் ஜயசூரிய மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினையும் பதிவு செய்திருந்தார்.
பிரபாத் ஜயசூரியவின் இந்தப் பந்துவீச்சு பெறுதியும், அவரின் அண்மைக்காலப் போட்டிகளும் அவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்ட காரணமாகியிருக்கின்றது.
அந்தவகையில் வெறும் 06 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள பிரபாத் ஜயசூரிய மொத்தமாக 43 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பதோடு, தற்போது ஐ.சி.சி. இன் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது 669 தரநிலைப் புள்ளிகளுடன் 19ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார்.
ஏற்கனவே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 32ஆவது இடத்தில் இருந்த பிரபாத் ஜயசூரிய தற்போது 13 இடங்கள் முன்னேறியே 19ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன் இது பிரபாத் ஜயசூரியவின் சிறந்த டெஸ்ட் தரநிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் அயர்லாந்து டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரகாசிப்பை வெளிப்படுத்திய மற்றுமொரு சுழல்பந்துவீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது 32ஆவது இடத்தில் காணப்படுகின்றார். ரமேஷ் மெண்டிஸ் 576 தரநிலைப் புள்ளிகளுடன் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மறுமுனையில் இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களும் ஐ.சி.சி. இன் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர்.
இதில் அயர்லாந்து மோதலில் அபார சதம் (179) விளாசிய இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 09ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார். ஏற்கனவே 10ஆவது இடத்தில் காணப்பட்ட திமுத் கருணாரத்ன தற்போது 783 தரநிலைப் புள்ளிகளுடன், தனது சிறந்த தரநிலைப் புள்ளிப் பதிவை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா
இதேவேளை அயர்லாந்து மோதலில் சதம் விளாசிய மற்றுமொரு இலங்கை துடுப்பாட்டவீரரான தினேஷ் சந்திமாலும், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார். அந்தவகையில் தினேஷ் சந்திமால் 04 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தில் காணப்படுகின்றார். தினேஷ் சந்திமால் தற்போது 693 தரநிலைப் புள்ளிகளை தற்போது எடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தினேஷ் சந்திமால் 2022ஆம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் டெஸ்ட் போட்டிகளில் 90 இற்கு அதிகமான துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<