700 கோல்களை தொட்டார் ரொனால்டோ

249

உக்ரைனுக்கு எதிரான 2020 யூரோ தகுதிகாண் போட்டியில் கோல் ஒன்றை பெற்ற போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் 700 ஆவது கோலை பதிவு செய்து புதிய மைல்கல்லைப் பதிவு அடைந்துள்ளார்.  

எனினும், உக்ரைன் தலைநகரில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்த்துக்கல் 2-1 என தோல்வியை சந்தித்தது. 72 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் உக்ரைன் வீரரின் கையில் பந்து பட்டதை அடுத்து போர்த்துக்கலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஐந்து முறை பல்லோன் டிஓர் விருது வென்ற ரொனால்டோ கோல் பெற்று தனது 700ஆவது கோலைப் பதிவு செய்து இந்த சாதனையை படைத்தார்.

தென் கொரியாவிடம் 8 கோல்களுடன் தப்பித்த இலங்கை அணி

தென் கொரியாவின் ஹ்வாசியோங்கில் …..

கால்பந்து அரங்கில் இந்த மைல்கல்லை எட்டும் ஆறாவது வீரர் ரொனால்டோ ஆவார். இதற்கு முன் ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரர் கேர்ட் முல்லர் (735), ஹங்கேரியின் பெரென்க் புஸ்கஸ் (746), பிரேசிலின் பீலே (767) மற்றும் ரொமாரியோ (772) மற்றும் செக் குடியரசின் ஜோசப் பிகன் (805) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.  

தற்போது கால்பந்து ஆடிவரும் வீரர்களில் பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மாத்திரமே ரொனால்டோவை நெருங்கி உள்ளார். மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்வில் இதுவரை 672 கோல்களை பெற்றுள்ளார்

கடந்த 2003 ஓகஸ்ட் 20 ஆம் திகதி கசகஸ்தானுக்கு எதிராக 1-0 என வெற்றியீட்டிய போட்டியில் தனது 18 வயதில் முதல் முறை சர்வதேச கால்பந்தில் நுழைந்த 34 வயது ரொனால்டோ, 2004 யூரோ கிண்ண ஆரம்பப் போட்டியில் தனது முதல் கோலை புகுத்தினார். எனினும் கிரேக்கத்திற்கு எதிரான அந்தப் போட்டியில் போர்த்துக்கல் 2-1 என தோல்வியை சந்தித்தது.  

கழக மட்டத்தில் ஸ்போர்டிங் அணிக்காக ஐந்து கோல்களைப் பெற்ற ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடட் சார்பில் 118 கோல்களை குவித்துள்ளார். எனினும், அவர் ஒரு கழக மட்ட சாதனையாக ரியல் மெட்ரிட் சார்பில் 450 கோல்களை பெற்றதோடு, தற்போது ஆடிவரும் ஜுவாண்டஸ் சார்பில் 32 கோல்களை பெற்றுள்ளார்

சர்வதேச மட்டத்தில் ரொனால்டோ மொத்தம் 95 கோல்களை பெற்றுள்ளார். அது ஈரானின் அலி டாயி பெற்ற 109 சர்வதேச கோல்களுக்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது. ரொனால்டோ இதுவரை 973 போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது