15ஆவது ஐரோப்பிய கால்பந்துப் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.‘இ’ மற்றும் ‘எப்’பிரிவில் கடைசி ‘லீக்’ஆட்டங்கள் நேற்று நடந்தன.‘எப்’பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஹங்கேரி-போர்த்துக்கல்அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ஹங்கேரி முதல் கோலை அடித்தது. ஜெரா இந்த கோலை அடித்தார். 42ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் நானி பதில் கோல் அடித்து சமன் செய்தார்.
2ஆவது பகுதி ஆட்டத்தில் ஹங்கேரி வீரர் பலாஸ் கோல் அடித்து (47ஆவது நிமிடம்) அந்த அணியை முன்னிலை பெறவைத்தார்.
போர்த்துக்கல் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50ஆவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். 55ஆவது நிமிடத்தில் ஹங்கேரி அணி 3ஆவது கோலை அடித்தது. பிலாஸ் இந்த கோலை அடித்தார். இதற்கு 62ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் பதில் கோல் அடித்து சமன் செய்தது.
ரொனால்டோ இந்த கோலை அடித்தார். ஆட்டம் இறுதி வரை மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் போர்த்துக்கல் தோற்று இருந்தால் வெளியேறி இருக்கும். 3ஆவது இடத்தைப் பிடித்த அணிகளில் சிறந்தவை என்ற முறையில் அந்த அணி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது. ரொனால்டோவின் சிறந்த ஆட்டத்தால் போர்த்துக்கல் தோல்வியைத் தவிர்த்து ‘டிரா’செய்தது.
ஆஸ்திரியாவுக்கு எதிராக பெனால்டி ஷூட்டைத் தவறவிட்ட இவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது இமேஜை காப்பாற்றினார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து-ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் ஐஸ்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
‘எப்’ பிரிவில் ஹங்கேரி முதல் இடத்தையும், ஐஸ்லாந்து 2ஆவது இடத்தையும் பிடித்து “நாக்அவுட்” சுற்றுக்கு முன்னேறின. போர்த்துக்கல் 3ஆவது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரியா 4ஆவது இடத்தை பிடித்து வெளியேறின.
ஒவ்வொரு பிரிவிலும் 3ஆவது இடத்தைப் பிடித்த அணிகளில் முதல் 4 அணிகளில் போர்த்துக்கல் இடம் பெற்றதால் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
‘இ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இத்தாலி-வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. இதில் வடக்கு அயர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. இந்தத் தோல்வி மூலம் சுவீடன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்தப் பிரிவில் இத்தாலி, பெல்ஜியம் முதல் 2 இடங்களை பிடித்து 2ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றன. சிறந்த 3ஆவது அணிகளில் வடக்கு அயர்லாந்து வாய்ப்பை பெற்றது. சுவீடன் 4ஆவது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது.
2 நாள் ஓய்வுக்குப் பிறகு “நாக் அவுட்” சுற்று 25ஆம் திகதி தொடங்குகிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்