யூரோ கிண்ண கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் போலந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இந்த போட்டியின் முழு நேர மற்றும் கூடுதல் நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 1 கோல்கள் வீதம் போட்டிருந்தமையால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் போலந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பிரான்ஸ் தலைநகர் பெரிசில் யூரோ கிண்ண கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நடப்பு ‛சம்பியன்’ ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி விட்டன.
இந்நிலையில் இன்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் உலக கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, போலந்து அணியை சந்தித்தது.
போட்டி துவங்கி முதல் 3 நிமிடங்களுக்குள் போர்த்துக்கல் அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. போட்டி தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே போலந்து அணிக்கு லிவான்டவுஸ்கி கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து போர்த்துக்கல் கோல் போடும் முயற்சியில் மும்முரமாக ஈடுப்பட்டது. அதன் பலனாக போர்த்துக்கல் அணிக்கு 33வது நிமிடத்தில் ரினாடோ சான்சஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டது.
2ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமாக போராடின. இரு அணிகளுக்கும் கோல் போடும் வாய்ப்புகள் கிட்டினாலும் கோல் காப்பாளரின் சிறந்த கோல் காப்பு மற்றும் வீரர்களின் கவனயீனம் காரணமாக கோல் போடும் வாய்ப்புகள் நழுவ விடப்பட்டன. கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தனக்கு கோல் போடக் கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் 2ஆவது பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளுக்கும் கோல் போட முடியவில்லை. அதனால் போட்டி 1-1 என்று தொடர்ந்து காணப்பட்டது.
இதன் பின் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. இதன் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அத்தோடு போலந்து அணி யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் அடுத்த காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்