15ஆவது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின.
இந்தத் தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
உலக கால்பந்து தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள போர்த்துக்கல் அணியும், 17ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ரொனால்டோவின் வெளியேற்றத்தால், போர்த்துக்கல் அணி தடுமாற்றத்துடன் விளையாடியது. மற்றொரு புறம் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் மேலும் உயர்ந்தது.
ஆனாலும், முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த பிரான்ஸ் வீரர்களால், போர்த்துக்கல்லின் தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை.
இராண்டாம் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் பரபரப்பாக விளையாடின. வீரர்களின் காலில் உதைபட்டு பறந்த பந்து கோல் வலையில் சிக்காமல் கம்பத்தில் மட்டுமே பட்டுத் திரும்பியதால் அரங்கமே பதட்டத்துடன் காணப்பட்டது. இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது.
சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மேலும் ஆக்ரோஷமாக இரு அணி வீரர்களும் விளையாடினர். ஆட்டத்தின் 109ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணியில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஈடர் கோல் அடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க பிரான்ஸ் அணி வீரர்களின் கடைசி நேர முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதனால், ஆட்ட நேர முடிவில் போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்