பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எமது வீரர்கள் களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணத்தால் அணி தோல்வியைத் தழுவ நேரிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வலுவான அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் சதம் அடித்தும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்
This clip will only be available in Sri Lanka…
அதுமாத்திரமின்றி, இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக விளங்குகின்ற இங்கிலாந்து, கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் பெற்றுக்கொண்ட முதல் தோல்வியாக இது பதிவாகியது.
இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன்,
”பாகிஸ்தான் அணியின் வெற்றியானது இந்தப் போட்டித் தொடருக்கான சிறந்த விளம்பரமாக அமைந்துவிட்டது. இந்த இலக்கை எம்மால் அடைய முடியும் என நாங்கள் கருதினோம். ஆனால், இவ்வாறான இறுக்கமான முடிவொன்று தவறான தீர்மானத்தால் அமைந்துவிட்டது என்பது கவலையளிக்கிறது.
ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் போட்டியின் 40ஆவது ஓவர் வரை போட்டியை எமது கைககளில் தக்கவைத்து இருந்தனர். அதேபோல, முதல் 6 இடங்களிலும் உள்ள எமது வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். ஆனால், இறுதி 10 ஓவர்களில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தனர்” என்றார்.
பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் களத்தடுப்பில் சில தவறுகளை விட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த மோர்கன்,
”இன்றைய போட்டியில் நாங்கள் மேற்கொண்ட மோசமான களத்தடுப்புதான் இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமாக காணப்பட்டது. களத்தடுப்பில் இது எங்களுக்கு சிறந்த நாளாக அமையவில்லை. இதனால் 15-20 ஓட்டங்களை மேலதிகமாக வழங்கியிருந்தோம். அவர்கள் நன்றாக பந்து வீசியிருந்தனர்,
அதேபோல, களத்தடுப்பிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். எனவே இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியுடையவர்கள். களத்தடுப்பு தான் இதற்கான வித்தியாசம் என நினைக்கிறேன்” என்றர்.
இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அணி தலா ஒரு வெற்றி, தோல்வியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமது அடுத்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த மோர்கன்,
பங்களாதேஷிற்கு எதிராக எதிர்வரும் 8ஆம் திகதி கார்டிப்பில் நடைபெறவுள்ள போட்டிக்கு இந்தத் தோல்வியானது தடையாக இருக்காது என நம்புகிறேன்.
எனினும், இந்தப் போட்டியில் பெற்றுக்கொண்ட பாடங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சிறந்த முறையில் களமிறங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<