இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2014ம் ஆண்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் பின்னடைவுகள் இருந்தாலும், அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத அணியாக வலம் வந்திருந்தது.
குறிப்பாக T20 உலகக்கிண்ணங்களில் அதிக வெற்றிகரமான அணியாக பார்க்கப்படும் இலங்கை நடைபெற்றுள்ள ஏழு T20 உலகக்கிண்ணங்களில் 3 தடவைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி 2014ம் ஆண்டு சம்பியனாகவும் முடிசூடியிருந்தது.
உலகக்கிண்ணம் பயணிக்கும் மீனவ தந்தையின் மகன் ; டில்ஷான் மதுசங்கவின் கதை!
இலங்கை அணியின் வெற்றிகளுக்கு பின்னால் துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு என வீரர்கள் தங்களுடைய பங்களிப்புகளை குறைவின்றி வழங்கியிருந்தனர். அந்தவகையில் T20 உலகக்கிண்ணங்களில் வெற்றிகரமாக இருந்து, இலங்கைக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மஹேல ஜயவர்தன – 2007-2014
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன T20 உலகக்கிண்ணங்களில் வெளிப்படுத்தியுள்ள பிரகாசிப்புகள் ஏராளம். மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், இறுதிக்காலப்பகுதியில் T20I போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயற்பட்டிருந்தார்.
இலங்கை அணி 2014ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெல்வதில் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்த இவர், இலங்கை அணிக்காக மாத்திரமின்றி, ஒட்டுமொத்த T20 உலகக்கிண்ணங்களையும் பொருத்தவரை அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக இன்றுவரை திகழ்கின்றார்.
T20I போட்டிகளில் இலங்கைக்காக மஹேல ஜயவர்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் மாத்திரமே சதம் விளாசியுள்ளனர். இதில் T20 உலகக்கிண்ணத்தில் மஹேல ஜயவர்தன மாத்திரமே இலங்கைக்காக சதம் அடித்துள்ளார். 2010ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மஹேல ஜயவர்தன 31 உலகக்கிண்ணப்போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 6 அரைச்சதங்கள் அடங்கலாக 1016 ஓட்டங்களை குவித்துள்ளார். T20 உலகக்கிண்ண வரலாற்றில் இதுவரை எந்த துடுப்பாட்ட வீரரும் 1000 ஓட்டங்களை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திலகரட்ன டில்ஷான் 2007-2016
இலங்கை கிரிக்கெட் அணியில் இன்றும் விளையாடலாம் என்ற அளவில் உடற்தகுதியுடன் இருப்பவர் திலகரட்ன டில்ஷான். நடைபெற்றுமுடிந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் அவரின் துடுப்பாட்டமும், பந்துவீச்சும், களத்தடுப்பும் அதே மட்டத்தில் இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.
தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மத்தியவரிசை வீரராக ஆரம்பித்திருந்த போதும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாறிய பின்னரே இவருடைய முழு திறமையும் வெளிப்பட்டது.
T20 உலகக்கிண்ணத்தில் சதத்தை விளாச தவறியபோதும், 2009ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளாசிய 96* ஓட்டங்கள் இலங்கை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டிருந்தபோதும், தனியாளாக இவர் 57 பந்துகளில் 96 ஓட்டங்களை பெற்றதுடன், 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி போட்டியை வெற்றிக்கொண்டது.
T20 உலகக்கிண்ணத்தில் 6 அரைச்சதங்களை பெற்றுள்ள இவர், 34 இன்னிங்ஸ்களில் 897 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
குமார் சங்கக்கார 2007-2014
இலங்கை கிரிக்கெட் அணியின் அற்புதமான துடுப்பாட்ட வீரர் என வர்ணிக்கப்படும் வீரர்களில் முக்கியமானவர் குமார் சங்கக்கார. தன்னுடைய கவர் ட்ரைவ் துடுப்பாட்டத்தின் மூலம் ஏரளமான ரசிகர்களை தன்பக்கம் திருப்பியிருந்தவர்.
இலங்கை அணியின் T20 உலகக்கிண்ண கனவு பல தடவைகள் தகர்ந்திருந்தாலும், 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தன்னுடைய அரைச்சதத்தின் மூலம் கிண்ணத்தை வென்றுக்கொடுத்து T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
பங்களாதேஷின் மிர்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், உலகக்கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்காக 30 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைச்சதங்கள் அடங்கலாக 661 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அஞ்செலோ மெதிவ்ஸ் 2009-2016
இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட சகலதுறை வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் இன்றுவரையும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
உபாதைகள் காரணமாக பந்துவீசுவதை நிறுத்திக்கொண்டிருக்கும் மெதிவ்ஸ், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிவரும் நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இடத்தை பிடிக்க தவறியுள்ளார்.
ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய காலப்பகுதியிலிருந்து இலங்கை அணியின் மறுக்கமுடியாத சகலதுறை வீரராக இருந்துவந்துள்ளார். மஹேல ஜயவர்தன, திலகரட்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகிய முன்னணி வீரர்களுக்கு மத்தியில், T20 உலகக்கிண்ணங்களில் பல முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.
T20 உலகக்கிண்ணத்தை பொருத்தவரை 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட இவர், 2 அரைச்சதங்களுடன் 22 இன்னிங்ஸ்களில் 459 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
சனத் ஜயசூரிய 2007-2010
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் என்றும் மறக்கப்படாத துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய. அவருடைய துடுப்பாட்ட பாணியை ரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது.
T20 உலகக்கிண்ணம் ஆரம்பித்த 2007ம் ஆண்டுக்கு முன்பும் இவருடைய வேகமான ஓட்டக்குவிப்பு அனைவரையும் ஈர்த்திருந்தது. எனினும், 2007ம் ஆண்டு T20 உலகக்கிண்ணம் அறிமுகமாகியபோது, கென்யா அணிக்கு எதிராக 260 ஓட்டங்களை இலங்கை அணி விளாசியது. இன்றுவரையும் T20 உலகக்கிண்ணத்தில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது உள்ளது.
குறித்த இந்தப்போட்டியில் சனத் ஜயசூரிய 44 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதுவே T20 உலகக்கிண்ணத்தில் இவர் பெற்றுக்கொண்ட அதீகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் மாறியிருந்தது. இலங்கை அணிக்காக 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், 3 அரைச்சதங்கள் அடங்கலாக 346 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<