கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் தனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தங்களிடம் திறமை இருந்தும் தங்களது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காததால் பல கிரிக்கெட் வீரர்கள் வேறு நாட்டிற்காக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரில், சொந்த நாட்டுக்காக விளையாடாமல் வேறு நாட்டுக்காக விளையாடும் பல வீரர்கள் விளையாடுவதை அவதானிக்க முடியும். அவர்களில் பெரும்பாலான வீரர்கள் நியூசிலாந்து அணிக்காக விளையாடுகின்ற வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒரு நாட்டில் பிறந்து, கல்வி கற்று, கிரிக்கெட் பயிற்சிகளை பெற்று பிற நாடுகளுக்காக விளையாடி வருகின்ற வீரர்கள் பற்றிய சிறிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மார்க் சாப்மன் (நியூசிலாந்து)
கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கெதிரக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஹொங்கொங் அணிக்காக மார்க் சாப்மன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 20 வயது.
அறிமுகப் போட்டியில் 116 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களைக் குவித்து, அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த உலகின் 10வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
எனினும், ஹொங்கொங் அணிக்காக அந்தப் போட்டியுடன், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிய பின்னர் 2018இல் நியூசிலாந்து அணியுடன் இணைந்து கொண்டார். அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நியூசிலாந்து அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதுவரை 7 ஒருநாள் மற்றும் 40 T20i போட்டிகளில் விளையாடியுள்ள அவர், T20i போட்டிகளில் 3 அரைச் சதங்களைக் குவித்துள்ளார்.
இதில் 2015இல் ஓமான் அணிக்கெதிராக முதல் T20i அரைச் சதத்தைப் பெற்றுக்கொண்ட மார்க், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்கெதிரான போட்டியில் அரைச் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச T20i கிரிக்கெட்டில் 2 நாடுகளுக்காக அரைச் சதமடித்த வீரர் என்ற பெருமையயும் அவர் பெற்றுக் கொண்டார்.
28 வயதுடைய பந்துவீச்சு சகலதுறை வீரரான இவர், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். எனினும், அவருக்கு இறுதிப் பதினொருவரில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
>> T20 உலகக் கிண்ண ஹட்ரிக் நாயகர்கள்
எவ்வாறாயினும், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் மீண்டும் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்த அவர், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டிக்கான நியூசிலாது இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பிடித்திருந்தார். எனினும், அவருக்கு துடுப்பெடுத்தாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
டெவோன் கான்வே (நியூசிலாந்து)
தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க்கில் பிறந்த டெவோன் கொன்வே முதல்தரப் போட்டிகளில் மாத்திரமே நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். எவ்வாறாயினும், தென்னாபிரிக்கா தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் 2017 இல் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். இதனையடுத்து வெலிங்டன் கழகத்துக்காக ஆடி வந்த அவர், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்தின் சிறந்த உள்ளூர் கழகமட்ட வீரராக தெரிவாகினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 போட்டியில் நியூசிலாந்துக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 2021 மார்ச் மாதம் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தையும், அதே ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதில் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் விளையாடிய அவர் அங்கு இரட்டைச் சதம் அடித்தார். இதன்மூலம் லோர்ட்ஸ் மைதானத்தில் வைத்து அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதடித்த 2ஆவது நியூசிலாந்து வீரராகவும், உலகளவில் 6ஆவது வீராகவும் இடம்பிடித்தார்.
இதுவரை நியூசிலாந்துக்காக 9 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 363 ஓட்டங்களைக் குவித்துள்ள 31 வயதான கொன்வே, 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் மற்றும் 4 அரைச் சதங்களுடன் 918 ஓட்டங்களையும், 29 T20i போட்டிகளில் ஆடி 9 அரைச் சதங்களுடன் 1033 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
>> இளம் இலங்கை அணியை பலப்படுத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்
இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் போட்டியில் துடுப்பாட்டத்தில் கலக்கிய அவர் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டஙகளைக் குவித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)
தென்னாபிரிக்காவில் பிறந்த 25 வயதான க்ளென் பிலிப்ஸ் தனது 5 வயதில் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து வந்தடைந்தார்.
நியூசிலாந்தின் ஒடாகோ கழகத்தில் ஆடி திறமைகளை வெளிப்படுத்திய அவர், 2016 பங்களாதேஷில் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார்.
கடந்த 2017இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக T20i அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2020இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தையும், அதே ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக பிலிப்ஸ், இதுவரை 50 T20i போட்டிகளில் ஆடி ஒரு சதம் உட்பட 1106 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 2020 மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 போட்டியில் கன்னி சதமடித்து, T20i போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், 2021 இல் முதல் தடவையாக நியூசிலாந்து அணியின் பிரதான ஒப்பந்தத்துக்குள் உள்வாங்கப்பட்ட அவர், அதே ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20i உலகக் கிண்ணத்திலும் விளையாடினார்.
இஷ் சோதி (நியூசிலாந்து)
இந்தர்பீர் சிங் சோதி அல்லது இஷ் சோதி இந்தியாவின் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்தார். 4 வயதில் பெற்றோருடன் இந்தியாவை விட்டு வெளியேறிய சோதி, 2013ல் நியூசிலாந்து அணியில் இணைந்தார்.
பங்களாதேஷ் அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட இவர், 2014இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக T20i அறிமுகத்தையும், 2015இல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.
29 வயதுடைய லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளரான இவர், நியூசிலாந்துக்காக இதுவரை 17 டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 80 T20i போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் T20i போட்டிகளில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
>> உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்
இந்த நிலையில், 2018இல் முதல் தடவையாக நியூசிலாந்தின் வருடாந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2019இல் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2021 T20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிருந்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20i உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டியில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷான் மசூத் (பாகிஸ்தான்)
குவைத்தில் பிறந்த ஷான் மசூத், மத்திய கிழக்கு போரின் போது குவைத் மீது ஈராக் படையெடுத்த வேளையில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். மசூதின் தந்தை பாகிஸ்தான் நாட்டவர் என்பதால் அவர்கள் போரின் போது அங்கு தஞ்சமடைந்தனர்.
ஆனால் விரைவில், மசூத் தனது பெற்றோருடன் இங்கிலாந்து குடிபெயர்ந்து அங்கு தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழக அணியில் ஆரம்பித்தார்.
அதன்பின் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு, விளையாட்டு அறிவியலில் மேலாண்மை பட்டப்படிப்பைப் படிக்கும்போது பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பாகிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i என மூவகை கிரிக்கெட்டிலும் விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், 2007 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஆட ஆரம்பித்த ஷான் மசூத், 2013இல் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். அறிமுக டெஸ்ட்டில் 75 ஓட்டங்களைக் குவித்த அவர், 2015இல் பல்லேகலையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கன்னி சதமடித்து அசத்தினார்.
டெஸ்ட் வீரராக வலம்வந்த ஷான் மசூத், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2019இல் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தையும், அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக T20i அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
33 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், வலது கை மித வேகப் பந்துவீச்சாளருமான ஷான் மசூத் இதுவரை 25 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளதுடன், 13 T20i போட்டிகளில் ஆடி 272 ஓட்டங்களைக் குவித்துள்ளார். T20i போட்டிகளில் 3 அரைச் சதங்களையும் குவித்துள்ள இவர், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கெதிராக முதலாவது போட்டியில்
ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணிக்கு வலுச்சேர்த்தார்.
கிறிஸ் ஜோர்டன் (இங்கிலாந்து)
கரீபியன் தீவுகளில் உள்ள பார்படோஸில் பிறந்த கிறிஸ் ஜோர்டன், அங்கு ஆரம்ப கல்வியை மேற்கொண்டார். எனினும், அவரது அம்மாவின் பெற்றோர் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றவர்களாக இருந்ததன் காரணமாக, கிறிஸ் ஜோர்டன் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். உலகின் பிரபல பொப் பாடகிகளில் ஒருவரான ரிஹானா அவரது பள்ளித் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறு வயது முதல் கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், இங்கிலாந்துக்கு வந்த பிறகு சர்ரே அணியில் இணைந்து கொண்டார். இதில் 2007 இல் சர்ரேயின் எதிர்கால வீரராகவும் விருது பெற்றார்.
இந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகள் சர்ரே அணிக்காக விளையாடிய பிறகு 2012இல் மீண்டும் பார்படோஸ் திரும்பிய அவர், அங்குள்ள தேசிய கிரிக்கெட் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் களமிறங்கினார். இதயைடுத்து 2013ஆம் ஆண்டு சசெக்ஸ் அணியுடன் கிறிஸ் ஜோர்டன் இணைந்து கொண்டார்.
எவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்தும் அதே நேரத்தில் இங்கிலாந்து அணியிலிருந்தும் தேசிய கிரிக்கெட் அணியில் சேர அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் பிறந்த நாட்டை விட, இங்கிலாந்து அணிக்காக விளையாட தீர்மானித்தார்.
அதன்படி, 2013இல் இங்கிலாந்துக்காக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளிலும், 34 ஒருநாள் போட்டிகளிலும், 82 T20i போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக T20i அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட இவர், T20i போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வலம் வருகின்றார். அதேபோல, உலகின் பல்வேறு T20 லீக் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக இடம்பிடித்து விளையாடி வருகின்ற 34 வயதான கிறிஸ் ஜோர்டன், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மாத்திரம் 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
>> T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!
எவ்வாறாயினும், இங்கிலாந்து அணிக்காக 2014 முதல் T20 உலகக் கிண்ணத் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற அவர், தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்திலும் இங்கிலாந்து அணிக்காக ஆடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவரும், நட்சத்திர சகலதுறை வீரருமான பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பென் ஸ்டோக்ஸின் தந்தையான ஜிரார்ட் ஸ்டோக்ஸ் ஒரு புகழ்பெற்ற நியூசிலாந்து ரக்பி வீரர். வீரராகவும் பயிற்சியாளராகவும் ஒரு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நபர். இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள வொர்க்கிங்டன் டவுன் ரக்பி அணியின் பயிற்சியாளராக பணியாற்றியதன் காரணமாக அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸுக்கு 12 வயதாகும். மறுபுறத்தில் பென் ஸ்டோக்ஸின் அம்மாவும் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றவர் ஆவார்.
15 வயதில் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்த பென் ஸ்டோக்ஸ், தனது பாடசாலை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இதன்போது வெளிப்படுத்திய திறமை காரணமாக இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் அவர் உள்வாங்கப்பட்டார்.
தனது தந்தையின் சேவை முடிந்ததும் பென் ஸ்டோக்ஸின் குடும்பத்தார் நியூசிலாந்து திரும்ப முடிவு செய்தாலும், அவர் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாட முடிவு செய்தார். அதன்படி, 2011இல் அயர்லாந்து அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தையும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக T20i அறிமுகத்தையும் பெற்றுக் கொண்ட அவர் 2013இல் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
2019இல் ஐசிசி இன் ஒருநாள் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்துக்கு வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இவர், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதுமாத்திரமின்றி, 2019 – 2020 இற்கான விஸ்டன் நாழிதழின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இடம்பிடித்த அவர், ஐசிசி இன் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
>> T20 உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்
எவ்வாறாயினும், தொடர்ச்சியாக உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், ஜோ ரூட்டின் தலைமையில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்ததன் காரணமாக, அவருக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தவைராக அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்தது.
31 வயதான வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்துக்காக 86 டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 39 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டிம் டேவிட் (அவுஸ்திரேலியா)
சிங்கப்பூரில் பிறந்த டிம் டேவிட்டின் தந்தை ரொட் டேவிட் 1997 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர். 1990 முதல் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் பொறியாளராகப் பணிபுரிந்தார். அந்த நேரத்தில்தான் டிம் டேவிட் சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1997 இல் ஆசியாவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, டிம் டேவிட்டின் குடும்பம் அவுஸ்திரேவியாவிற்கு குடிபெயர்ந்தது.
அதன்படி, அந்நாட்டில் வளர்ந்த டிம், தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தனது கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். 2017-18 பருவத்தில், பிக் பேஷ் T20 லீக் போட்டியில் டிம் டேவிட் விளையாடினார். இதனையடுத்து அவருக்கு சிங்கப்பூர் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான அழைப்பு கிடைத்தது.
அதன்படி, 2018ஆம் ஆண்டு ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய டிம், அடுத்த ஆண்டே சிங்கப்பூர் T20 அணியில் விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். அதன்படி சிங்கப்பூர் அணிக்காக 14 T20i போட்டிகளில் விளையாடிய டிம், 558 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதனிடையே, அவுஸ்திரேலியா குடியுரிமைக்கு தகுதி பெற்றிருந்த டிம், சிங்கப்பூர் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், அவுஸ்திரேலியாவின் முதல்தரப் போட்டிகளிலும் பங்கேற்றார். அங்கு அவர் சிறப்பாக செயல்பட்டதால், 2022இல் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இணைகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா அணிக்கெதிராக T20i தொடர், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான T20i தொடர்களில் ஆடிய அவர், இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியா அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகின்றார்
ஜோஷ் இங்கிலிஸ் (அவுஸ்திரேலியா)
இங்கிலாந்தில் பிறந்த 27 வயதுடைய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஷ் இங்கிலிஸ், தனது 14ஆவது வயதில் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமாகியது. 2022இல் இலங்கைக்கு எதிராக T20i மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். இதுவரை அவுஸ்திரேலியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 9 T20i போட்டிகளில் களமிறங்கி 220 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் ஜோஷ் இங்கிலிஸ் அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தாலும் அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல, தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட குழாத்தில் அவர்
இடம்பிடித்திருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இருந்து அவர் விலகினார்.
ரிச்சர்ட் பெரிங்டன் (ஸ்கொட்லாந்து)
தென்னாபிரிக்காவில் பிறந்த ரிச்சர்ட் பெரிங்டன், சிறு வயதிலேயே தனது குடும்பத்தாருடன் ஸ்கொட்லாந்துக்கு குடிபெயர்ந்தார். 2006இல் இலங்கையில் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடிய அவர், 2008இல் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு அந்த அணிக்கெதிராக T20i அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.
35 வயதுடைய சகலதுறை வீரரான இவர், இதுவரை 97 ஒருநாள் மற்றும் 79 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமாத்திரமின்றி, T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஸ்கொட்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெரிங்டன் பெற்றுள்ளார். அவர் இதுவரை ஒரு சதம் மற்றும் 7 அரைச் சதங்களுடன் 1784 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
2009 முதல் T20 உலகக் கிண்ணத்திலும், 2015 முதல் ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடி வருகின்ற அனுபவ வீரரான ரிச்சர்ட் பெரிங்டன், கைல் கெட்ஸரின் திடீர் இராஜினாமாவை அடுத்து ஸ்கொட்லாந்து அணியின் தலைவராக கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார்.
>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் குழு B இல் ஸ்கொட்லாந்து அணி இடம்பிடித்தது. இதில் முன்னாள் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய போதிலும், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான போட்டியில் தோல்லியைத் தழுவி சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
கார்டிஸ் கேம்பர் (அயர்லாந்து)
தென்னாபிரிக்காவில் பிறந்த கார்டிஸ் கேம்பர் அந்நாட்டின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்காக விளையாடினார். ஆனால் அந்நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியால் அவருக்கு அயர்லாந்து செல்லும் வாய்ப்பு உருவாகிறது. அதற்கு அங்கிருந்த அவரது பாட்டியின் ஆதரவும் கிடைத்தது. 2020இல் இற்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 2021இல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக T20i அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் கார்டிஸ் கேம்பர் ஹட்ரிக் விக்கெட் சாதனை படைத்து அசத்தினார். நெதர்லாந்து அணிக்கு எதிராக குறித்த சாதனையைப் புரிந்ததன் மூலம், T20 உலகக் கிண்ண வரலாற்றில் ஹட்ரிக் சாதனை படைத்த முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
23 வயதுடைய வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான கார்டிஸ் கேம்பர், இதுவரை 26 T20i போட்டிகளில் விளையாடி 384 ஓட்டங்களைக் குவித்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சிமி சிங் (அயர்லாந்து)
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த 35 வயதான சிமி சிங், 2018 இல் அயர்லாந்துக்காக கிரிக்கெட் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட 19 வீரர்களில் ஒருவர்.
கடந்த 2017இல் நடைபெற்ற பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சிமி சிங், 2018இல் நெதர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு T20i தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். இதில் நெதர்லாந்து அணிக்கெதிரான அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை அவர் எடுத்தார். இதன்மூலம் அறிமுக T20i போட்டியில் 8ஆம் இலக்கத்தில் களமிறங்கி அரைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து 2019இல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து அணியில் அவர் இடம்பிடித்த போதிலும், அவருக்கு அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது இவ்வாறிருக்க, கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்காக எட்டாவது இலக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசிய சிமி சிங் மற்றுமொரு சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாவது இலக்கத்தில் களமிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.
>> T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகின்ற சிமி சிங், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
35 வயதான வலது கை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான இவர் இதுவரை அயர்லாந்துக்காக 35 ஒருநாள் மற்றும் 53 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். சகலதுறை வீரராகத் திகழும் சிமி சிங், 53 T20i போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளையும், 296 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
கார்த்திக் மெய்யப்பன் (ஐக்கிய அரபு இராச்சியம்)
சென்னையில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன் தற்போது ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். சிறந்த சுழல் பந்துவீச்சாளரான இவர் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் அந்த அணிக்காக தற்போது பங்கெடுத்து வருகிறார். இவரின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்து கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் குழு A யில் ஐக்கிய அரபு இராச்சியம் அணி விளையாடியது. இதில் நமீபியா
அணிக்கெதிரான போட்டியில் வெற்றியீட்டிய அந்த அணி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிக்கெதிரான போட்டிகளில் தோல்வியைத் தழுவி சுபர் 12 வாய்ப்பை இழந்தது.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான போட்டியில் கார்த்திக் மெய்யப்பன் ஹட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் ஹட்ரிக் சாதனை படைத்த முதல் வீரராகவும், ஒட்டுமொத்தத்தில் 5ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.
இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக் மெய்யப்பனுடன் சேர்த்து பிற நாடுகளைச் சேர்ந்த இன்னும் எட்டு வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்காக விளையாடியிருந்தனர். இதில் 6 பேர் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களாகவும், இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களாகவும் உள்ளனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<