T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!

ICC T20 World Cup 2022

1049

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை சாதாரண போட்டியொன்றில் சதங்களை விளாசுவது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. தொழில்முறை கிரிக்கெட்டில் ஏராளமான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தும் சதங்களை பெற்றுக்கொள்ளும் வீரர்களை விரல் விட்டு எண்ணிவிடமுடியும்.

தற்போது கிரிக்கெட், துடுப்பாட்ட வீரர்களுக்கான போட்டியாக ஏரத்தாள மாறியுள்ள நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என அனைத்துவித போட்டிகளிலும் சதமடிக்கும் வீரர்களை பார்க்கமுடிகின்றது.

T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!

இதில் T20I போட்டிகளை பொருத்தவரை சதங்களை பெறுவதென்பது கடினமான விடயம். அதில் T20 உலகக்கிண்ணம் போன்ற தொடர்களில் சதங்களை பெறுவதென்பது மிகச்சவாலான விடயம். இவ்வாறு சவாலான மைல்கல்களை T20 உலகக்கிண்ணங்களில் எட்டியிருக்கும் வீரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்வையிடலாம்.

கிரிஸ் கெயில் – 2007, 2016

ஐசிசி T20 உலகக்கிண்ண வரலாற்றில் இரண்டு சதங்களை பெற்றுள்ள ஒரே ஒரு வீரர் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில்.

T20 உலகக்கிண்ணம் 2007ம் ஆண்டு ஜொஹன்னர்பேக்கில் ஆரம்பிக்க தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது மேற்கிந்திய தீவுகள். முதல் போட்டியிலேயே தன்னுடைய அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கிரிஸ் கெயில் சதத்துடன் T20 உலகக்கிண்ணத்தை ஆரம்பித்தார்.

இவர் 57 பந்துகளை எதிர்கொண்டு 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை இவர் பெற்றுக்கொண்டிருந்தார். எனினும் ஹேர்ஷல் கிப்ஸின் 90 ஓட்டங்களின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 206 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை அடைந்து தென்னாபிரிக்க அணி போட்டியில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு T20 உலகக்கிண்ணத்திலும் கிரிஸ் கெயில் விளையாடியிருந்ததுடன், 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில் மீண்டும் சதமொன்றை அடித்து அசத்தினார்.

இம்முறை T20 உலகக்கிண்ணத்தில் வேகமான சதத்தை பதிவுசெய்தார் கெயில். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இந்தப்போட்டியில் 183 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இந்தப்போட்டியில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற கிரிஸ் கெயில் 47 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து T20 உலகக்கிண்ணத்தின் வேகமான சதத்தை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த இன்னிங்ஸில் இவர் 11 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளை விளாசியதுடன், குறித்த இந்த உலகக்கிண்ணத்தில் மே.தீவுகள் அணி சம்பியனாகவும் முடிசூடியது.

சுரேஷ் ரெய்னா – 2010

இந்திய கிரிக்கெட் அணியில் பல முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் இருந்துவந்த போதும், முன்னாள் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னாவை தவிர வேறு எந்த வீரரும் T20 உலகக்கிண்ண போட்டிகளில் சதங்களை அடித்ததில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் இதுவரையில் ஒரே ஒரு T20 உலகக்கிண்ண சதம் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.   அதனை சுரேஷ் ரெய்னா பதிவுசெய்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளில் 2010ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான குழுநிலைப்போட்டியில் இந்திய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 186 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, தனியாளாக அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு ரெய்னா பலம் கொடுத்தார்.

இவர் 60 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். குறித்த இந்த சதமானது, T20I கிரிக்கெட்டில் ரெய்னா பெற்றுக்கொண்ட ஒரேயொரு சதமாகவும் பதிவாகியிருக்கிறது.

மஹேல ஜயவர்தன – 2010

இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா தென்னாபிரிக்காவுக்கு எதிராக சதமடித்த அடுத்த நாள், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தன்னுடைய முதல் T20I மற்றும் T20I உலகக்கிண்ண சதத்தையும் பிரொவிடன்ஸ் மைதானத்தில் பதிவுசெய்தார்.

மஹேல ஜயவர்தன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இந்தப்போட்டியில் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக இவர் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இவரின் இந்த இன்னிங்ஸின் காரணமாக 173 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணிக்கு மழை காரணமாக 5 ஓவர்களில் 44 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட, அந்த அணி 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பிரெண்டன் மெக்கலம் – 2012

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்திய 2012ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கலமின் சதம் இலங்கை ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாகும்.

காரணம் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்களாதேஷ் அணியை, நியூசிலாந்து எதிர்கொண்டது. நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய நிலையில், அணியின் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக மெக்கலம் களமிறங்கினார்.

வெறும் 51 பந்துகளில் சதமடித்த இவர் T20 உலகக்கிண்ணத்தில் வேகமான சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டதுடன், மொத்தமாக 57 பந்துகளில் 123 ஓட்டங்களை குவித்து, T20 உலகக்கிண்ணத்தில் அதிக தனிநபர் ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். இவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகளையும் விளாசியதுடன், 191 ஓட்டங்களை பெற்ற நியூசிலாந்து அணி 59 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது.

அலெக்ஸ் ஹேல்ஷ் – 2014

இலங்கை அணி 2014ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை வென்று அசத்தியிருந்தது. ஆனால் உலகக்கிண்ணத்தை வென்ற குறித்த ஆண்டில் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மாறியிருந்தது.

மஹேல ஜயவர்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் செட்டகிரோம் மைதானத்தில் 190 எனும் பாரிய வெற்றியிலக்கை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது.

இவ்வாறான பாரிய இலக்கை நிர்ணயித்தும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஷ் அற்புதமாக துடுப்பெடுத்தாடியிருந்தார். அணித்தலைவர் இயன் மோர்கன் அரைச்சதம் கடந்து அணிக்கு பங்களிப்பை வழங்கியபோதும், அலெக்ஸ் ஹேல்ஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து அணிக்காக முதல் T20 உலகக்கிண்ண சதத்தையும் இவர் பதிவுசெய்தார்.

அஹ்மட் சேஷாட் – 2014

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹ்மட் சேஷாட், T20 உலகக்கிண்ணத்தில், பாகிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை பதிவுசெய்தார். மூன்று T20 உலகக்கிண்ணங்கள் நடைபெற்றுமுடிந்த நிலையில், நான்காவது T20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்காக T20 சதம் ஒன்று பதிவுசெய்யப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய அஹ்மட் சேஷாட் மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை குவித்த இவர், 111 ஓட்டங்களை பெற்றார்.

இந்த இன்னிங்ஸில் 62 பந்துகளை எதிர்கொண்ட இவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பால் – 2016

தர்மசாலாவில் நடைபெற்ற ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக முதல் T20 உலகக்கிண்ண சதத்தினை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் பதிவுசெய்தார்.

குறிப்பிட்ட இந்தப்போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், தமிம் இக்பால் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை பதிவுசெய்தார்.

தமிம் இக்பால் 63 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 180 ஆக உயர்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணிக்கு மழைக்காரணமாக 12 ஓவர்களில் 120 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட, அந்த அணி 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியை சந்தித்தது.

ஜோஸ் பட்லர் – 2021

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில் சம்பியனாகும் அணியென அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணி இங்கிலாந்து.

பலமான குழாத்துடன் விளையாடி இங்கிலாந்து அணிக்கு, குழுநிலை போட்டியில் இலங்கை அணி கடுமையான சவாலை கொடுத்தது. இலகு வெற்றிகளுடன் இருந்த இங்கிலாந்து அணி, இலங்கை அணியை வீழ்த்துவதற்கு கடினமாக போட்டியிட்டது.

இங்கிலாந்து அணியின் பலமான துடுப்பாட்ட வரிசையை இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தடுமாறச்செய்தாலும், முதல் பாதி முழுவதும் தனியாளாக மந்தமான ஓட்டவேகத்துடன் ஆடிய ஜோஸ் பட்லர், இறுதி ஓவர்களில் அற்புதமாக ஆடி இங்கிலாந்து அணிக்கு T20 உலகக்கிண்ணத்தில் இரண்டாவது சதத்தை பெற்றுக்கொடுத்தார்.

முதல் 50 ஓட்டங்களை 45 பந்துகளில் கடந்திருந்த இவர், அடுத்த 50 ஓட்டங்களை வெறும் 22 பந்துகளில் கடந்து தன்னுடைய சதத்தை பதிவுசெய்தார். இதில், 6 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை இவர் விளாசியிருந்தார். போட்டியை பொருத்தவரை இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<