கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

685

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி போராடி சமநிலையில் முடித்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி, கோஹ்லியின் அபார சதத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. எனினும், 2ஆவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களை முகங்கொடுக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் நிறைவில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இதில் சீரற்ற காலநிலையால் போட்டிகளின் முதலிரண்டு நாட்களும் தடைப்பட்டாலும், தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்த ஒரு சில வீரர்கள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனைகளை படைத்திருந்தனர்.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை ஆரம்பம்

உலகின் மிகவும் பழமையான சர்வதேச கிரிக்கெட் போட்டித்..

இப்போட்டியில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அணியொன்று முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. முன்னதாக 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இவ்வாறு களத்தடுப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  

16 வருட கால சாதனையை முறியடித்த லக்மால்

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் நீண்ட கால சாதனையொன்றை முறியடித்தார்.

போட்டியின் முதலிரண்டு நாட்களிலும் மழை காரணமாக 32.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்டன. இதன்படி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவ்வணி 5 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதில் முதல் நாளில் 6 ஓவர்கள் பந்துவீசிய சுரங்க லக்மால், எந்தவொரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து 2ஆவது நாளிலும் பந்துவீசிய அவர், தனது 47ஆவது பந்தில் முதல் ஓட்டத்தை விட்டுக்கொடுத்தார்.

இதன்மூலம் முதல் ஓட்டத்தை விட்டுக் கொடுக்க முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் லக்மால் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

முன்னதாக 2001இல் மேற்கிந்திய தீவுகளின் டெய்லர், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 40 பந்துகள் வரை எந்தவொரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்பத்தியிருந்தார்.

ஹேரத்தினால் 5 சாதனைகள் முறியடிப்பு

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அரைச்சதம் அடித்து இலங்கையை தோல்வியின் பிடியிலிருந்து மீட்க உதவிய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், 5 புதிய சாதனைகளைப் படைத்தார்.

இப்போட்டியில் 67 ஓட்டங்களைக் குவித்த அவர், முதல்தரப் போட்டிகளில் சதம் அடிக்காமலேயே அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் இலங்கை வீரராக இடம்பிடித்தார். இதுவரை அவர் 5,000 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன், இந்திய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக வயதில் அரைச்சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

சர்வதேச அரங்கில் 1,500 ஓட்டங்கள் மற்றும் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் ஹேரத் இந்த டெஸ்டின்மூலம் பெற்றுக்கொண்டார்.

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப்..

மேலும், இந்திய மண்ணில் 8ஆவது அல்லது அதற்கு அடுத்த வீரராக களமிறங்கி அதிக வயதில் அரைச் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஹேரத் முதலிடம் பெற்றார்.

இந்திய மண்ணில் விளையாடிய வெளிநாட்டு அணி வீரர்களில் அதிக வயதில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற 2ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

திரிமான்னவின் முதல் அரைச்சதம்

கடந்த 2 வருடங்களாக போதியளவு திறமையின்மையால் இலங்கை அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த லஹிரு திரிமான்ன, இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி அரைச்சதம் கடந்து அசத்தினார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் திரிமான்ன 27 ஓட்டங்களை எடுத்தபோது கொடுத்த எளிதான பிடியெடுப்பை தவான் தவறவிட்டார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அரைச்சதம் கடந்துடன், 52 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்படி, 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இறுதியாக அரச்சதம் குவித்த அவர், மீண்டும் அதே இந்திய அணிக்கெதிராக சதம் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோஹ்லியின் அதிவிரைவான 50ஆவது சதம்

இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை பரபரப்பாக மாற்றியதில் விராட் கோஹ்லிக்கு முக்கிய பங்கு உண்டு. தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் சதம் அடித்ததுடன் இலங்கை அணிக்கு தோல்விப் பயத்தையும் உருவாக்கினார்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்த கோஹ்லி, 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பான விளையாட்டைக் காண்பித்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியின் 18ஆவது சதம் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 50 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 32 சதங்கள் அவரால் பெறப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 71 சதங்களுடன் 2ஆவது இடத்திலும், இலங்கையின் குமார் சங்கக்கார 63 சதங்களுடன் 3ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க வீரர்களான ஜெக் கல்லிஸ் 62 சதங்களுடன் 4ஆவது இடத்திலும், ஹசீம் அம்லா 54 சதங்களுடன் 5ஆவது இடத்திலும், இலங்கையின் மஹேல ஜயவர்தன 54 சதங்களுடன் 6ஆவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் பிரெயன் லாரா 53 சதங்களுடன் 7ஆவது இடத்திலும் உள்ளனர். இதில் 50 சதங்களைக் குவித்துள்ள விராட் கோஹ்லி 8ஆவது இடத்தில் உள்ளார்.

அத்துடன், 50 சதங்களை விரைவாக கடந்தவர்களின் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஹசீம் அம்லாவுடன் கோஹ்லி இந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 348 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அத்துடன், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி அதன் பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் சதம் விளாசிய முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

3ஆவது முறையாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 10 விக்கெட்

இந்தியாஇலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் புதிய சாதனையொன்றை நிகழ்த்தினர்.

இந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3ஆவது முறையாகும்.

கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினர். மோஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்திய மண்ணில் அவ்வணி வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் (10) வீழ்த்துவது இது 3ஆவது நிகழ்வாகும். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 34 வருடங்களுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் சுழற்பந்து வீரர்களான அஷ்வின், ஜடேஜா ஆகியோர் எந்தவொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றவில்லை.

இந்திய ஆரம்ப ஜோடியின் புதிய சாதனை

இப்போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி காரணமாக போட்டியின் போக்கு மாற்றமடைந்தது. இதில் ஷிகர் தவான் 96 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 70 ஓட்டங்களையும் குவித்து முதல் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஆரம்ப ஜோடி சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் தவான்ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக டேர்பனில் நடைபெற்ற டெஸ்ட போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷேவாக்கம்பீர் ஜோடி 137 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காகப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ

ஒரு காலினை மாத்திரம் கொண்ட சீன நாட்டு கால்பந்து…

முன்னதாக முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த 6ஆவது இந்திய வீரராக லோகேஷ் ராகுல் இடம்பிடித்தார். கடைசியாக 2007இல் பங்களாதேஷ் அணிக்கெதிராக சிட்டகொங்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வசிம் ஜாபர் இவ்வாறு ஆட்டமிழந்தார்.

புஜாரா சாதனை

டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் துடுப்பெடுத்தாடிய 3ஆவது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை செதேஷ்வர் புஜாரா நிகழ்த்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்த புஜாரா, போட்டியின் கடைசி நாளன்று 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் எம்.எல்.ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரி ஆகியோர் 5 நாட்களும் துடுப்பெடுத்தாடி சாதனை படைத்திருந்தனர்.  தற்போது அவர்களுடன் புஜாரவும் இணைந்து கொண்டார்.

குறித்த சாதனையை இம்மூன்று வீரர்களும் ஈடன் கார்டன் மைதானத்தில் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தியவர்களின் பட்டியலில் புஜாரா 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார். ஜெப்ஃரி போய்காட், ஹிம் ஹியூஸ், ஆலன் லேம்ப், அட்ரியன் கிரிபிஃத், ஆன்ட்ரூ பிளிண்டொப், ஆல்விரோ பீட்டர்சன் ஆகியோரும் டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள துடுப்பெடுத்தாடியுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றம்

சுழல் பந்துவீச்சில் எப்போதும் முன்னிலை வகிக்கின்ற இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இப்போட்டியில் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. மாறாக அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளர்கள மாத்திரமே இலங்கை அணியின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

2 இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி 110.1 ஓவர்கள் பந்துவீசி 17 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 8 ஓவர்களை வீசினாலும், 2ஆவது இன்னிங்ஸில் அவர் ஒரு பந்துகூட வீசவில்லை. எனினும், முதல் இரண்டு இன்னிங்ஸிலும் ஜடேஜா தலா ஒவ்வொரு ஓவர் பந்துவீசியிருந்தார். எனினும் இருவரும் எந்தவொரு விக்கெட்டினையும் கைப்பற்றவில்லை.

இதன்படி இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாதது போனது இதுவே முதல்முறையாகும். எனினும், இலங்கை அணியின் தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல சாதனைகளுடன் முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.