இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக நேற்று (04) நடைபெற்ற லீக் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக அறிமுகத்தை பெற்று அபாரமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட யாழ் மத்திய கல்லூரி மாணவனான விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட முன்னாள், இன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல பிரபலங்களும், இன, மத பேதம் கடந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இயற்கையை முன்நிறுத்தி புதிய ஜேர்ஸியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்
யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த், லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (04) நடைபெற்ற போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
இன்று (05) தனது 19ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற வியாஸ்காந்துக்கு லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கொடுத்ததன் மூலம் முன்கூட்டிய பிறந்தநாள் பரிசை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அவருக்கு வழங்கியது.
அந்த வகையில், வியாஸ்காந்தை லங்கா ப்ரீமியர் லீக்கில் அறிமுகப்படுத்துவதற்கான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தொப்பியை அணித் தலைவர் திசர பெரேரா அணிவித்தார். இதன் மூலம் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். மண்ணுக்கும் முழு வடக்கு மாகாணத்துக்கும் வியாஸ்காந்த் பெருமை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டை வீழ்த்தி, அனைவரது பாராட்டையும் வியாஸ் பெற்றுக் கொண்டார்.
மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் மொத்தமாக 29 ஓட்டங்களை மாத்திரம் அவர் எதிரணிக்கு கொடுத்திருந்தார்.
Video – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரகாசிப்பு குறித்து திலின கண்டம்பி!
அதுமட்டுமன்றி, துடுப்பாட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுக்காக களமிறங்கி, அன்ட்ரே ரஸலின் பந்துவீச்சுக்கு தைரியமாக முகங்கொடுத்து தன் பங்குக்கு 3 ஓட்டங்களை அணிக்குப் பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகத்தைப் பெற்று பந்துவீச்சில் மிரட்டிய வியாஸ்காந்துக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, ரஸல் ஆர்னல்ட் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இதில் போட்டியின் பிறகு இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
”மைதானத்தில் ஈரப்பதன் காணப்பட்டதால் பந்தினை கையாள்வதில் சிரமம் இருந்தது. எனினும், அறிமுக வீரராக களமிறங்கிய வியாஸ்காந்த், தனது அபரிமிதமான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்” என தெரிவித்தார்.
Video – அடுத்த போட்டிகளில் தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு திசர பெரேரா
இதனிடையே, வியாஸ்காந்தின் முதல் எல்.பி.எல் விக்கெட்டாக மாறிய அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவிக்கையில்,
”இந்தப் போட்டியில் வியாஸ்காந்த் சிறப்பாக பந்துவீசினார். வடக்கிலிருந்து வந்த வீரர் ஒருவர் இன்று விளையாடியமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் இதற்கு முன் நான் அவரை பார்த்ததில்லை. மிகவும் அருமையாக பந்துவீசினார். அவருடைய எதிர்காலம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
அத்துடன், அஞ்செலோ மெதிவ்ஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
”இது நல்லதொரு போட்டி. இந்த வெற்றியில் அணியில் உள்ள அனைவரும் முக்கிய பங்குவகித்தனர். அனைத்து பாராட்டுக்களும் அவர்களை சாரும். இதில் முக்கிய விடயமாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட வியாஸ்காந்த் திறமையான வீரர். அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
It was a good game and credit should go to the entire team for their effort.Special mention to vijaykanth of @JaffnaStallions who made his debut and what a talent?? All the best to him ? Thanks all for the support for @Colombokings1
— Angelo Mathews (@Angelo69Mathews) December 4, 2020
இதனிடையே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளர் திலின கண்டம்பி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதவில்,
”நேற்று இரவு எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், 19 வயதை இன்று எட்டிய நமது அறிமுக வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தின் திறமையை பார்க்க கிடைத்தமை இலங்கை கிரிக்கெட்டின் வெற்றியாகும். ஏதிர்காலத்தில் நிறைய வியாஸ்காந்தைப் பற்றி நாங்கள் நிறைய கேட்காலம்” என தெரிவித்தார்.
Last night we were not on the winning side . . .But it is a victory from Sri Lankan Cricket to see the talent of our debutant who turned 19 today. . . Vijayakanth Viyaskanth . . .We may hear a lot about Viyaskanth in future . . . @LPLt20official @jaffnalpl #Viyaskanth
— thilina kandambi (@thilinakandambi) December 5, 2020
இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
”இது முழு இலங்கைக்கும் மிகப் பெரிய நாள். கடந்த காலத்தைக் கொண்ட ஒரு இளம் இலட்சிய சிறுவன் அறிமுகமாகிறான். இந்த இளம் மாணிக்கம் எதிர்காலத்தில் சிறந்த ஒரு வீரராக மாறி நாட்டிற்கு பெருமையை தேடிக் கொடுப்பார் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
Absolutely in my opinion it was a massive day for our entire country. A young ambitious boy making his debut who has a such wonderful past to listen to. I’m sure this gem of a boy will make his roots and country proud soon or rather later?? #Viyaskanth #LPL2020 @OfficialSLC https://t.co/xEM2VDQF83
— Farveez Maharoof (@farveezmaharoof) December 5, 2020
இதுஇவ்வாறிருக்க, வியாஸ்காந்தின் அபார ஆட்டம் குறித்து யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரும் வியாஸ்காந்திற்கு நீண்ட காலம் பயிற்றுவிப்பாளராகவும் இருந்த சுரேஷ் மோகன் கருத்து தெரிவிக்கையில்,
”வியாஸ்காந்தின் இந்த அபார வருகையை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றது. வாழ்த்துக்கள் மகனே! இது யாழ். மத்திய கல்லூரிக்கு மாத்திரமின்றி முழு இலங்கையர்களுக்கும் பெருமையாகும்” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரஸல் ஆர்னல்ட் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
”ஜப்னா ஸ்டாலியின் அணி இன்று தோல்வியடைவில்லை. உண்மையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த புகைப்படம் மிகப் பெரிய கதையொன்றை சொல்கிறது” என குறிப்பிட்டார்.
The @jaffnalpl didn’t lose today they actually won .. This picture tells a massive story ??? Hasaranga and Viyaskanth ?@LPLT20 pic.twitter.com/ZydQV4JO1v
— Russel Arnold (@RusselArnold69) December 4, 2020
மறுபுறத்தில் இலங்கையின் மற்றுமொரு வர்ணனையாளரான ரொஷான் அபேசிங்க வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
”ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்ற இளம் வீரரான வியாஸ்காந்த் ஈர்க்கப்பட்டார். அழுத்தங்களுக்கு மத்தியில் பந்துவீசுவதும், அமைதியாக இருப்பதும் விலைமதிப்பற்றது. நன்றாக செல் இளம் வீரரே..!” என்று தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறுவதில் முன்நின்று செயற்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வியாஸ்காந்துக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த வாழ்ததுச் செய்தியில்,
”ஜப்னா லியன்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டமை அற்புதமான வியடம். இந்தத் தொடரில் எதிர்பார்த்த விடயம் இதுதான். நாடளாவிய ரீதியில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிவதும், அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டுவருவதுமாகும். வியாஸ்காந்துக்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
Wonderful to see young Vijaykanth earning his spurs in the @jaffnalpl side. This is exactly what this tournament is all about, providing a platform for youngsters around the country to showcase their talent. Wishing him best of luck! #ජයගමු ?? https://t.co/j74gufEyJ9
— Namal Rajapaksa (@RajapaksaNamal) December 4, 2020
இதேவேளை இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
”விளையாட்டு என்பது ஒரு உலகளாவிய மொழி. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், நாம் அனைவரும் இலங்கையர்களாக இருக்கிறோம். இதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது! யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த 18 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் இன்று லங்கா ப்ரீமியர் லீக்கில் அறிமுகமானார்” என தெரிவித்தார்.
Sports is a universal language. What matters is we are all be Sri Lankan’s. Amazing to see this! 18-year-old Vijayakanth Viyaskanth from Jaffna Central College making his LPL debut today ??? pic.twitter.com/FqImy83C7T
— Harin Fernando (@fernandoharin) December 4, 2020
அத்துடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கனடா நாட்டு தொழிலதிபர் ராகுல் சூட் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
”இன்று நாம் யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவனான விஜயகாந்த் வியாஸ்காந்த் என்ற லெக்ஸ்பின் சுழல்பந்துவீச்சாளரை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் இது எவ்வளவு பெரிய ஒப்பந்தம் என்பதை என்னால் வலியுறுத்த முடியாது” என குறிப்பிட்டார்.
Today we are incredibly proud to introduce 18 year old Vijayakanth Viyaskanth, aka VV the leg spinner, from Jaffna Central College. ?
I can’t stress how big a deal this is for me personally and for the team. @RusselArnold69 thanks for calling him out! pic.twitter.com/OeTEo1Vg7B
— Rahul Sood ?? (@rahulsood) December 4, 2020
இதேவேளை, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஆலோசகர்களில் ஒருவராக உள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் ஹேமங் பதானியும் வியாஸ்காந்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதவில்,
”சிறுவனுக்கு இன்று 19 வயதாகும்போது வானமே எல்லையாக காணப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் அணித் தலைவரின் விக்கெட் அவரது முதல் விக்கெட்டாக அமைந்ததை அவர் என்றும் நினைவில் வைத்திருப்பார். திறமையான வீரர்களை வெளிக் கொண்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும். இளைஞனை பறக்கவிட்டு உங்கள் மக்களை பெருமைப்படுத்துங்கள்” என தெரிவித்தார்.
sky is the limit as the boy turns 19 today..former srilankan skippers wicket as his first scalp is a memory he will cherish forever #Viyaskanth #OnlyJaffna @jaffnalpl great job done in unearthing such talent!!fly away young man and make your ppl proud! https://t.co/VRY1qjxgl4
— Hemang Badani (@hemangkbadani) December 4, 2020
தனது அறிமுக போட்டியிலேயே கிரிக்கெட் வர்ணனையாளர்களின் மனதை வென்ற வியாஸ்காந், பந்துவீச்சில் அசத்தி தனது திறமையை நிரூபித்துள்ளார். இதனால் அவர் நிச்சயம் இலங்கை தேசிய அணிக்கு விளையாட வேண்டுமென்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
எனவே, இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிப்பதோடு, விரைவில் இலங்கை அணிக்காக அவர் விளையாட வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம்.
>>மேலும் பல LPL தகவல்களைப் பார்வையிட<<