அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ், உபாதை காரணமாக உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்படுவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி நாளைய தினம் (06) தங்களுடைய இறுதி லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஷோன் மார்ஷ் நேற்று உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
உலகக் கிண்ணம் ஒரு பாடமாக அமைந்தது – குல்படின்
இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் ………..
வலைப்பயிற்சியின் போது அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் வீசிய பந்து நேரடியாக ஷோன் மார்ஷின் வலது முழங்கைக்கு கீழ் பகுதியை (forearm) தாக்கியுள்ளது. அதேநேரம், ஷோர்ன் மார்ஷிற்கு மாத்திரமின்றி, நேற்றைய பயிற்சியின் போது மிச்சல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்று, கிளேன் மெக்ஸ்வலின் வலது முழங்கையின் முன் பகுதியில் தாக்கியிருக்கிறது.
இவ்வாறு, உபாதைக்கு உள்ளாகியிருந்த இருவரும், பயிற்சியிலிருந்து வெளியேறியதுடன், இருவருக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், மெக்ஸ்வேலின் உபாதையானது அபாயகரமாக இல்லாத போதும், மார்ஷின் உபாதை தீவிரமானது என தெரியவந்துள்ளது. பந்து தாக்கிய இடத்தில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், மார்ஷ் குழாத்திலிருந்து நீக்கப்படுவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஷோன் மார்ஷின் உபாதை குறித்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் குறிப்பிடுகையில், “பயிற்சியின் போது பந்து தாக்கியதில் மார்ஷ் உபாதைக்கு முகங்கொடுத்தார். பின்னர், அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் துரதிஷ்டவசமாக குறித்த பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், குறித்த உபாதைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என்றார்.
நேற்றைய வெற்றியால் திருப்தியடையும் மோர்கன்
உலகக் கிண்ணத்தில் நேற்று (03) நடைபெற்ற ……….
அதேநேரம், கிளேன் மெக்ஸ்வலின் உபாதை தீவிரமானது அல்ல என குறிப்பிட்ட ஜஸ்டின் லாங்கர், அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பெறுவார் என நம்புவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, ஷோன் மார்ஷிற்கு பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான பீட்டர் ஹென்ட்ஸ்கொம் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. ஹென்ட்ஸ்கொம் தற்சமயம் இங்கிலாந்து A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையிலான தொடரில் (இங்கிலாந்தில்) விளையாடி வருவதாகவும், இன்றைய தினம் (05) அணியுடன் இணைவார் எனவும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய அறிவித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<