நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக பீட்டர் புல்டன்

224
Espncricinfo

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் பீட்டர் புல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான கிரைக் மெக்மிலன் உலகக் கிண்ண தொடருடன் பதவியிலிருந்து விலகுவதால் குறித்த இடத்துக்கு பீட்டர் புல்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறவுள்ள கிரைக் மெக்மிலன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ………

நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான மைக் ஹெசன் நியமிக்கப்பட்ட போது, கடந்த 2014ம் ஆண்டு மைக் ஹெசனால் கிரைக் மெக்மிலன் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஐந்து வருட காலமாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இவர், 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருடன் பதிவியிலிருந்து விலகுவதாக கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.

கிரைக் மெக்மிலன் தனது முடிவை அறிவித்திருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கான புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னர் அறிவிக்கப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனினும், உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் பீட்டர் புல்டன் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீட்டர் புல்டனின் நியமனம் குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் குறிப்பிடுகையில், “உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் எமது அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக பீட்டர் புல்டன் இணையவுள்ளார். அவர், எமது அணியின் சூழ்நிலையுடன் சிறந்த முறையில் ஒத்துப்போகக் கூடியவர். அத்துடன், துடுப்பாட்டம் தொடர்பில் சிறந்த புரிதல் உள்ளவர்.

எமது அணியின் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்புவதற்கான அவரது குறிக்கோள்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதேநேரம் எமது 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அனுபவமும் அவரிடம் உள்ளது. அதுமாத்திரமின்றி எமது அணியில் விளையாடிய வீரர் என்பதால், எமது கலாச்சரத்தினை பேணுவதற்கான சிறந்த பயிற்றுவிப்பாளராக பீட்டர் புல்டன் இருப்பார்” என்றார்.

பங்களாதேஷுடனான ஒருநாள் குழாமில் மார்டின் கப்டிலுக்கு அழைப்பு

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான………

பீட்டர் புல்டன் உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள போதும், இவரின் பணி ஜூலை முதலாம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. எனினும், நியூசிலாந்து அணியின் உலகக் கிண்ண லீக் போட்டிகள் ஜூலை 3ம் திகதி நிறைவடைவதுடன், உலகக் கிண்ண தொடர் ஜூலை 14ம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான பீட்டர் புல்டன், 2006ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டுவரை 23 டெஸ்ட் போட்டிகள், 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், ஓய்வுபெற்ற பின்னர், நியூசிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<