லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் நடப்பது உறுதி

338
Permission granted to conduct for LPL

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரினை நடாத்த இலங்கை அரசாங்கம்,  சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்திருப்பதனை அடுத்து அந்த தொடர் இம்மாத இறுதியில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த பச்சைக் கொடி

இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC), இந்த ஆண்டு முதல் தடவையாக நடாத்த திட்டமிடப்பட்டிருந்த லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலினால் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் குறைந்த சந்தர்ப்பம் ஒன்றில் இந்த தொடரினை நடாத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானம் மேற்கொண்டிருந்தது. அதன்படி, இந்த தொடரின் வீரர்கள் ஏலமும் கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்றிருந்தது. 

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில், மீண்டும் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிக்க இந்த தொடர் நடைபெறுவதில் சந்தேகங்கள் உருவாகியிருந்தன. 

எனவே, இந்த தொடரினை நடாத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று (4) பேச்சுவார்த்தை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, அதில் தொடரினை நடாத்துவதற்கான சுகாதார அமைச்சின் சம்மதத்தினைப் பெற்றிருந்தது. அதேநேரம், சுகாதார அதிகாரிகள் இத்தொடரினை நடாத்தும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய வேறு சில நடைமுறைகளையும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் நேற்றைய பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டிருந்தனர். 

ஆனால், இந்த தொடரினை  நடாத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (5) வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், குறித்த அறிவிப்பினை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் வெளியிட்டிருக்கின்றார். 

அந்தவகையில், நடைபெறவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போட்டிகள் சிறிது தாமதமாக ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலேயே இடம்பெறவிருக்கின்றன.

முன்னதாக, லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச மைதானம், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களிலும் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தொடர் சிறிது தாமதமாக ஆரம்பமாகும் எனக் கூறப்பட்டிருக்கின்றமையினால் தொடரின் போட்டி அட்டவணையும் புதிதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேநேரம், இந்த தொடருக்காக வெளிநாடுகளில் இருந்து வருகின்ற வீரர்களின் தனிமைப்படுத்தல் காலமும் ஒரு வாரமாக குறைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இலங்கையின் நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கேற்கவிருப்பதோடு, இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும், வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் பங்கெடுக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<