உலகக் கிண்ணத்தில் ஆட அரச அனுமதி கோரியுள்ள PCB

244

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கெடுப்பதற்கு தமது நாட்டு அரசாங்கத்தின் அனுமதியினை கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணையினை ஐ.சி.சி. (ICC) நேற்று (27) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த உலகக் கிண்ண அட்டவணையில் தமது அணி ஆடும் போட்டிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை வேண்டுகோள் விடுத்த போதும் குறித்த வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டு போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்போது உலகக் கிண்ணத் தொடரில் தாம் பங்கேற்க தமது நாட்டு அரசின் அனுமதி வேண்டும் எனக் கூறியிருக்கின்றது.

அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பேச்சாளர்களில் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு (PCB) (உலகக் கிண்ணம் உட்பட) எவ்வகையான கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்காக இந்தியா செல்வதற்கும், போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் தொடர்பிலும் அரச அனுமதி தேவையாக இருக்கின்றது.”

”நாங்கள் தற்போது அரசுடன் பேச்சுவார்த்தைகளில் இருப்பதோடு, இதற்கான வழிகாட்டல்களையும் எதிர்பார்த்திருக்கின்றோம். எனவே எங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை நாங்கள் தொடர் ஏற்பாட்டுக்குழுவிடம் (ICC இடம்) அறிவிப்போம். எமது இந்த நிலைப்பாடு இரண்டு வாரங்களின் முன்னர் ICC தொடரின் மாதிரி அட்டவணையை தந்து அது தொடர்பில் எமது கருத்தினை கேட்ட போது அதற்கு நாம் அவர்களுக்கு வழங்கிய பதிலின் அடிப்படையிலானதாகவும் இருக்கின்றது.”

விடயங்கள் எவ்வாறு இருந்த போதும் எந்தப் பிரச்சினைகளும் இன்றி அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு அமைய பாகிஸ்தான் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னதாக உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அஹமதாபாதில் ஒழுங்கு செய்யப்பட்டதற்கும் அவ்வணி ஆப்கான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் விளையாடும் போட்டிகள் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதிற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பாகிஸ்தான் ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளை தமது நாட்டில் நடாத்துவது தொடர்பான விடயங்களிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் (BCCI) ஏற்கனவே முரண்பட்டுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை விடயங்கள் அனைத்தும் உறுதியாகும் சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தமது முதல் உலகக் கிண்ண போட்டியினை ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடர் மூலம் தெரிவாகும் முதலாவது அணியுடன் (Qualifier 1) விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<