இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிரிக்கெட் தொடரில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தமது அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு 3 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் இதுவரை போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் முறுகல் நிலை இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு முன் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசியக் கிண்ணத்தில் இந்தியா பங்பேற்காது என BCCI தரப்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டு ஆசியக் கிண்ணமும் நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமின்றி, ஆசியக் கிண்ணத்தை கலப்பு வடிவத்தில் நடத்துவதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இம்முறை ஆசியக் கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் தமது அணி விளையாடது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது.
- பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஏனைய ஆசிய கிரிக்கெட் அணிகள்?
- இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
- ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடாத்த திட்டமா?
இதனையடுத்து உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது தொடர்பில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே மற்றும் ICC பொது முகாமையாளர் ஜியோப் அல்லார்டிஸ் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேத்தியை சந்திப்பதற்காக கடந்த வாரம் கராச்சிக்கு சென்றனர்.
அப்போது ICC அதிகாரிகளிடம் நஜாம் சேத்தி, ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி ஆடுகின்ற போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாடக் கோரவில்லை என்று உறுதியளித்ததாக தெரிகிறது.
ICC தலைவர்களுடனான சந்திப்பின்போது ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்தால், சென்னை, பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் தங்கள் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நஜாம் சேத்தி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இறுதிப் போட்டி போன்ற நொக் அவுட் ஆட்டமாக இல்லாவிட்டால், பாகிஸ்தான் போட்டிகள் அஹமதாபாத்தில் நடத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ICC அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<