13 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசர அழைப்பு

1027
PCB recalls 13 players
Image courtesy – ESPN Cricinfo

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்கள் என மொத்தம் 13 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதியோடு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் டி20 கிரிக்கெட் தொடரிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளிலும் விளையாடி வருகிறார்கள்.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்துள்ள சொஹைப் மலிக், இமாத் வசீம், சதாப் கான், ஹசன் அலி, மொஹமட் ஹபீஸ், வஹாப் ரியாஸ், பாபர் அசாம் உள்ளிட்ட 7 வீரர்களும், ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்களான கம்ரான் அக்மல், சொஹைல் தன்வீர் மற்றும் மொஹமட் சமி ஆகியோரும் விளையாடி வருகின்றனர்.

மிகப்பெரிய மாற்றங்களுடன் வலுவான நிலையில் இலங்கை ஒரு நாள் குழாம்

இந்தியாவுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான ..

இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான நெஷனல் டி20 கிண்ணத்துக்கு திரும்ப வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ராவல் பிண்டி, பைசாலாபாத் மற்றும் லாகூர் வைட் ஆகிய அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.

எனினும், இம்முறை கரீபியன் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு போட்டித் தொடரிலிருந்து இடைநடுவே விலகிச் செல்வது தமக்கு மிகப் பெரிய இழப்பு என கரீபியன் டி20 தொடரின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உலக பதினொருவர் அணியுடனான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதுடன், அதன்பிறகு ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரிலும் அவ்வணி விளையாடவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து கவுண்டி போட்டிகளுக்காக எசெக்ஸ் அணியில் மொஹமட் ஆமிர், யோக்ஷயார் அணியில் சர்பிராஸ் அஹமட், சமர்செட் அணியில் பகர் சமான் மற்றும் ஜுனைத் கான் ஆகியோர் விளையாடி வருகின்றார்கள். இவர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திரும்ப அழைத்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் தலைமையில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள உடற்தகுதி பயிற்சி முகாமில் இவ்வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.