பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு இலங்கைக்கு அழைப்பு

2274

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடுமாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அழைப்பு விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் பாகிஸ்தானின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும், குறுகிய தொடரொன்றுக்கு முழுமையான அணியொன்றை அனுப்புவதற்கான காலஅவகாசம் தற்போது இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இரத்து

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 5 T20i போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர்கள் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் சபை பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர்கள் இஸ்லாமாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் டுபாயை சென்றடைந்தனர்.

இந்த நிலையில், நியூசிலாந்து சுற்றுப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் குறுகிய கிரிக்கெட் தொடரொன்றை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

T20 உலகக் கிண்ணத்தின் பின் பங்களாதேஷ் செல்லும் பாகிஸ்தான் அணி

இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் கருத்து தெரிவிக்கையில்,

நியூசிலாந்து தொடர் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.

அப்போது இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் பாகிஸ்தானில் வந்து விளையாட சம்மதம் தெரிவித்தன,. ஆனால் இரு அணிகளையும் சேர்ந்த முக்கிய வீரர்கள் அணியில் இல்லை எனவும், குறுகிய அறிவிப்பொன்றின் மூலம் தொடரொன்றுக்கு தயாராகுவது சிரமம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்” அவர் குறிப்பிட்டார்.

எமது கிரிக்கெட் சபையின் தலைவர் இருநாட்டு சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு குறுகிய கிரிக்கெட் தொடரொன்றை நடத்த முயற்சித்தோம். ஆனால் குறுகிய காலத்தில் அணியைத் தயார்படுத்துவது கடினம் என்பதை அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் T20 உலகக் கிண்ணத்தை இலக்காக வைத்து ஒருசில போட்டிகளில் விளையாடவிருப்பதாகவும், சில வீரர்கள் IPL தொடரில் விளையாடி வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் வந்து விளையாடுவது கடினம்” என தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரானார் ரமீஸ் ராஜா

இதுஇவ்வாறிருக்க, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் B குழுவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான T20 உலகக் கிண்ணப் போட்டி ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் கருத்து தெரிவிக்கையில்,

நியூசிலாந்து அணியுடனான போட்டியை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம். ஆனால் நியூசிலாந்து கடைசி நேரத்தில் தொடரை ரத்த செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப் பெரிய அவமானமாக கருதப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்து அணியின் எடுத்த முடிவு குறித்து ஐசிசியிடம் புகார் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…