பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் மிக்கி ஆர்தர் பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராக கடந்த வாரம் பொறுப்பேற்ற நஜாம் சேத்தியின் முயற்சியின் பிரதிபலனாக அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் தனது பொறுப்பில் இருந்து விலக உள்ளதால், அந்த அணிக்கு வெளிநாட்டவரைக் கொண்டு வர நஜாம் சேத்தி தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
இதன்படி, குறித்த தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
- பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சஹீட் அப்ரிடிக்கு புதிய பதவி
- பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி அட்டவணை, மைதானங்களில் மாற்றம்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியுடன் இணையவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா நாட்டவரான மிக்கி ஆர்தர் 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணயின் பயிற்சியாளராக பணியாற்றினார், அவரது பயிற்றுவிப்பு காலத்தில் தான் பாகிஸ்தான் அணி 2017 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றதுடன், ஐசிசியின் T20 அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் அணியை முதலிடத்திற்கு கொண்டு வரவும் முக்கிய பங்காற்றினார்.
அதுமாத்திரமின்றி, அந்த காலகட்டத்தில், அவர் சப்ராஸ் அஹமட்டின் தலைமைத்துவத்தின் கீழ் பாகிஸ்தான் அணியை மறுசீரமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், 2019 ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார், மேலும் மிஸ்பா-உல்-ஹக்கிற்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமைத் தேர்வாளர் என்ற இரட்டைப் பதவி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2019 முதல் 2021 டிசம்பர் வரை பணியாற்றிய மிக்கி ஆர்தர், தற்போது இங்கிலாந்தின் டெர்பிஷயர் கவுண்டி அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருவதுடன், அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) தசுன் ஷானக தலைமையிலான தம்புள்ள ஓரா அணியின் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி இருந்தார்.
எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இடைக்கால நிர்வாகக் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை மிக்கி ஆர்தர் ஏற்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரை 3-0 என பாகிஸ்தான் அணி இழந்ததை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவொன்று அந்நாட்டு பிரதமரினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டது.
இதனையடுத்து மொஹமட் வசீம் தலைமையிலான தேர்வுக் குழுவும் அதிரடியாகக் கலைக்கப்பட்டதுடன், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தேர்வுக் குழு தலைவராக முன்னாள் ஜாம்பவான் சஹீட் அப்ரிடியை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<