பாகிஸ்தான் நாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது வீரர்கள் பஸ்சில் கடாபி மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். பஸ் மைதானத்தை நெருங்கியபோது தீவிரவாதிகள் பஸ் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஐந்து இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் ஐந்து பாதுகாப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் இரண்டு பொதுமக்களும் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக தொடரை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியது. அதன்பின் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கும் ஷகாரியார் கானின் தீவிர முயற்சியால் 2015 மே மாதம் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடியது.
அதன்பின் மற்ற அணிகளை சமாதானப்படுத்தி பாகிஸ்தானுக்கு வரவைக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல வழிகளை கடைபிடித்து வருகிறது. முதல் முயற்சியாக வீரர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கினால், அவர்கள் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறது.
இதனால் குண்டு துளைக்காத நவீன செகுசு பஸ் வாங்க முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்கு குண்டு துளைக்காத பஸ்களை வாங்கியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் நாட்டில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதன் முதல் கட்டமாக நான்கு பஸ்கள் வாங்கியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த ஷகா ஆஷ்ரப் இந்த யோசனையை தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு பஸ் வழங்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்