பங்களாதேஷை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாம் அறிவிப்பு

166

பங்களாதேஷ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட குழாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கினால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஒக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியை 3-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்திருந்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் டி20 தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. 

மூவகை தொடரிலும் விளையாட பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் அணி

மிக நீண்டகால காத்திருப்பின் பின்னர்…..

டி20 அணியின் புதிய தலைவராக நம்பிக்கை துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம் பெறுப்பை ஏற்றுக்கொண்டார். இறுதியாக பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 2-0 என்ற அடிப்படையில் இழந்தது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான தொடருக்காகவும் பாபர் அஸாம் தலைமையிலான வித்தியாசமான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலிய மண்ணில் பிக்பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியில் தனது வேகப் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டிவரும் 26 வயதுடைய ஹாரிஸ் ரௌப் குறுகிய காலப்பகுதியில் பாகிஸ்தான் டி20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். இதுவரையில் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரிஸ் ரௌப் 35 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

2019-20 பிக்பேஷ் லீக் தொடரில் இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரிஸ் ரௌப் ஒரு ஹெட்ரிக் சாதனையுடன் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும் இவ்வருட பிக்பேஷ் லீக் தொடரில் இதுவரையில் இரண்டாவது அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே…..

ஹாரிஸ் ரௌபுடன் இணைந்து மேலும் இரண்டு வீரர்கள் டி20 சர்வதேச குழாமுக்கு அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய துடுப்பாட்ட வீரர் அஹ்ஸன் அலி மற்றும் 24 வயதுடைய பந்துவீச்சு சகலறை வீரர் அமட் பட் ஆகியோர் இவ்வாறு அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியுடனான வெள்ளையடிப்பு தோல்வியின் பின்னர் அணித்தலைவர் பதவியை இழந்த சர்ப்ராஸ் அஹமட் பங்களாதேஷ் டி20 தொடரிலும் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 

இதேவேளை பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான அவுஸ்திரேலிய அணியுடனான டி20 குழாமில் இடம்பெற்றிருந்த பகார் ஸமான், மொஹமட் ஆமிர், ஆஸிப் அலி, ஹாரில் சுஹைல், இமாம் உல் ஹக், மொஹமட் இர்பான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 வீரர்கள் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் முக்கிய அனுபவ வீரரான சுகைப் மலிக் கடந்த காலங்களில் பிரகாசிக்காததன் காரணமாக பாகிஸ்தான் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் அசத்திவரும் காரணத்தினால் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். 

மேலும், மற்றுமொரு அனுபவ வீரரான மொஹமட் ஹபீஸ் இங்கிலாந்து மண்ணில் அசத்தியதன் காரணமாக இறுதியாக 2018 நவம்பர் மாதம் நியூசிலாந்து அணியுடன் விளையாடியதன் பின்னர் மீண்டும் பாகிஸ்தான் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் காரணமாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான தொடரை இழந்த 19 வயது இளம் வேகப் பந்துவீச்சாளர் சஹீன் ஷாஹ் அப்ரிடி மீண்டும் டி20 குழாமில் இணைந்துள்ளார். 

இறுதியாக, அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட 24 வயதுடைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா தொடர்ந்தும் பாகிஸ்தான் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். 

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லாஹூரில் நடைபெறவுள்ளது. 

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட்…….

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டி20 அணிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்படும் பாகிஸ்தான் அணியானது இறுதியாக நடைபெற்ற 9 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம்

பாபர் அஸாம் (அணித்தலைவர்), அஹ்ஸன் அலி, அமட் பட், ஹாரிஸ் ரௌப், இப்திகார் அஹமட், இமாட் வஸீம், குஷ்தில் ஷாஹ், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் றிஸ்வான், மூஸா கான், சதாப் கான், சஹீன் ஷாஹ் அப்ரிடி, சுகைப் மலிக், உஸ்மான் காதிர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<