கொரோனாவின் பின் மீண்டும் ஆரம்பமாகும் பாகிஸ்தான் சுப்பர் லீக்

362
Pakistan Cricket PSL
(AP Photo/Fareed Khan)

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரின் ஏஞ்சிய ‘நொக்அவுட்’ போட்டிகளுக்கான போட்டி அட்டவணை நேற்று (02) பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது. 

>> லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்

கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பெருமளவான அனுசரணையாளர்களுடன் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரும் பிரபலமான தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான குறித்த தொடரானது வருடா வருடம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

அதன் அடிப்படையில் ஐந்தாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் 6 அணிகளின் பங்குபற்றலுடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் ஆரம்பமானது. தொடர் ஆரம்பமாகி அனைத்து லீக் போட்டிகளும் நிறைவுபெற்ற நிலையில் உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களும் இடைநிறுத்தப்பட்டன. 

6 அணிகளிலும் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி தங்களது சொந்த நாடுகள் நோக்கி திரும்பினர். அதன் படி பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளுக்கிணங்க பாகிஸ்தான் சுப்பர் லீக் தொரானது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் சில நாடுகளில் மாத்திரம் உச்சத்தில் இருந்தாலும், பெருமளவான நாடுகளில் தாக்கம் குறைவடைந்துள்ளன. அதன் அடிப்படையில் மெல்ல மெல்ல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வழமைக்கு திரும்பி வருகிறன. அது மாத்திரமல்லாது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரும் இம்மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிறது. 

>> லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கான உத்தியோகபூர்வ திகதிகள் அறிவிப்பு

கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் கொரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய நொக்அவுட்போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன நவம்பர் மாதம் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த ஜூலை 2ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் நேற்று (02) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.

வெளியான போட்டி அட்டவணையின் படி லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளான முல்தான் சுல்தான்ஸ், கராச்சி கிங்ஸ், லாஹூர் கலன்டேர்ஸ் மற்றும் பேஷ்வர் ஷல்மி ஆகிய அணிகள் முறையே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

எஞ்சியுள்ள 4 போட்டிகளும் லாஹூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் சுப்பர் லீக் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் குறித்த தொடர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எஞ்சிய போட்டிகளுக்கான போட்டி அட்டவணை

14 நவம்பர்

  • Qualifier – முல்தான் சுல்தான்ஸ் எதிர் கராச்சி கிங்ஸ்
  • Eliminator 1 – லாஹூர் கலன்டேர்ஸ் எதிர் பேஷ்வர் ஷல்மி

15 நவம்பர்

  • Eliminator 2  – Qualifier போட்டியில் தோல்வியடைந்த அணி எதிர்  Eliminator 1 வெற்றி பெற்ற அணி

17 நவம்பர்

  • இறுதிப்போட்டி Qualifier  போட்டியில் வெற்றி பெற்ற அணி எதிர்  Eliminator 2 வெற்றி பெற்ற அணி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<