இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க உபாதைக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இம்மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏப்ரல் 21ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் மொமினுல் ஹக் தலைமையிலான பங்களாதேஷ் அணி நேற்று பெயரிடப்பட்டதுடன், அவர்கள் நாளை (12) இலங்கைக்கு வர உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான முதற்கட்ட குழாத்தை அறிவித்த பங்களாதேஷ்
இதற்கிடையில், இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்று துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த 22 வயதுடைய இளம் வீரரான பெதும் நிஸ்ஸங்க பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுள்ளது.
அவரது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு இந்த டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்று Sunday Observer ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கன்னி சதமடித்து சாதனை படைத்த பெதும் நிஸ்ஸங்க, அந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைச் சதம் உள்ளடங்கலாக 163 ஓட்டங்களைக் குவித்தார்.
எனவே, உபாதையினால் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை அவர் தவறவிட்டால், அது இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
எதுஎவ்வாறாயினும், பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெதும் நிஸ்ஸங்க விளையாடுவாரா? இல்லையா என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க