ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டைச்சதமடித்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க சாதனை படைத்துள்ளார்.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பெதும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 20 பௌண்டரிகள் அடங்கலாக 210 ஓட்டங்களை குவித்துக்கொண்டார்.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் டேரைல் மிச்சல்
சனத் ஜயசூரிய 2000ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஷார்ஜாவில் 189 ஓட்டங்களை விளாசியமை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
குறித்த இந்த சாதனையை 24 ஆண்டுகளுக்கு பின்னர் பெதும் நிஸ்ஸங்க முறியடித்ததுடன், ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். அதுமாத்திரமின்றி ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.
அதேநேரம் இலங்கை அணி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை இந்தப் போட்டியில் பதிவுசெய்துள்ளது. இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கு முதல் கடந்த 2018ம் ஆண்டு தென்னாபிரிக்க அணி, 363/7 ஓட்டங்களை இலங்கை அணிக்கு எதிராக பெற்றுக்கொண்டிருந்தது.
இதேவேளை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியுள்ளது. இலங்கை அணி 1996ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 398 ஓட்டங்களை இதற்கு முன்னர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<