இந்த ஆண்டு (2022) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க கண்டி பல்கோன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை டெஸ்ட் அணியின் அடுத்த வேகப்பந்து நட்சத்திரம் யார்?
கடந்த வாரம் LPL தொடரின் வீரர்கள் வரைவு நடைபெற்றிருந்த நிலையில், இந்த வீரர்கள் வரைபில் எந்த அணிகளினாலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்காத ஒரு முன்னணி வீரராக பெதும் நிஸ்ஸங்க மாறியிருந்தார்.
பெதும் நிஸ்ஸங்க எந்த அணிகளினாலும் ஒப்பந்தம் செய்யப்படாமல் போனது விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில் தற்போது அவரை கண்டி பல்கோன்ஸ் அணி தமக்காக விளையாட அழைத்திருக்கின்றது.
பெதும் நிஸ்ஸங்க கண்டி பல்கோன்ஸ் அணியில் இணைந்தது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அதன் உரிமையாளர் பர்வேஸ் கான், பெதும் நிஸ்ஸங்கவின் இணைப்பு கண்டி பல்கோன்ஸ் அணியின் துடுப்பாட்டத் துறையினை இன்னும் பலப்படுத்துவதாக குறிப்பிட்டதோடு, அவரினை LPL போட்டிகளில் பார்ப்பதில் இரசிகர்கள் சந்தோசமடைவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் தற்போது 8ஆவது இடத்தில் காணப்படும் பெதும் நிஸ்ஸங்க, கண்டி பல்கொன்ஸ் அணியில் தனது சக வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோருடன் இணைந்து புதிய LPL பருவத்தில் ஆடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், கண்டி பல்கோன்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளரான உஸ்மான் சின்வாரி உபாதைக்குள்ளானதை தொடர்ந்து அவர், அஹ்மட் டனியல் என்னும் வேகப் பந்துவீச்சாளர் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
>> கண்டி பெல்கோன்ஸ் அணியுடன் இணையும் சனத் ஜயசூரிய
அஹ்மட் டனியல் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பிக் பேஷ் லீக் (BBL) தொடரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
LPL தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<