இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ம் திகதி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பெங்களூரில் நடைபெறவுள்ளது.
>> டெஸ்ட் சகலதுறை வீரர்களில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா
இந்தநிலையில், பெதும் நிஸ்ஸங்கவின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ள காரணத்தால், இவரால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என சந்தேகிக்கப்படுகின்றது. பெதும் நிஸ்ஸங்க முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி முறையே 61 ஓட்டங்கள் மற்றும் 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். முதல் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பெதும் நிஸ்ஸங்கவின் உபாதை காரணமாக அடுத்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறியதாக இவருக்கு தடை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் இவர் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியாக, இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி அமையவுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், உபாதை காரணமாக வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது வீரராக பெதும் நிஸ்ஸங்க உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<