அண்மைக் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட தொடர் தோல்விகளில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரையும் குறிப்பிடலாம். புதிய எதிர்பார்ப்புடன், டெஸ்ட் அரங்கில் புதியதொரு இன்னிங்ஸை ஆரம்பிக்க இருந்த இலங்கை அணிக்கு வருடத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலே ஏமாற்றமே மிஞ்சியது.
அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர்கள் வழமைபோன்று தமது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியமையே இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேஜர் ப்ரீமியர் லீக்கில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த பெதும் நிஸ்ஸங்க
இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் ப்ரீமியர் …
எனினும், மஹேல, சங்கா, டில்ஷான் போன்ற சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணி கடந்த 4 வருடங்களாக மூன்று வகைப் போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகின்றமை யாரும் அறிந்த உண்மை.
அதிலும் குறிப்பாக, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்ககைக்கு இம்முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் உலகக் கிண்ணத்திற்கு தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் தோல்விக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல, 3 தடவைகள் டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று, 2014இல் டி-20 உலகக் கிண்ணத்தில் சம்பியனாகிய இலங்கைக்கு, எதிர்வரும் 2020இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க தகுதிகாண் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு பல பின்னடைவுகள், சிக்கல்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை மாத்திரம் நம்பி இலங்கை அணியை முன்னோக்கி கொண்டு செல்ல தேர்வாளர்கள் முயற்சிக்கும் இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற வீரர் ஒருவரைப் பற்றி பார்க்கவுள்ளோம்.
21 வயதுடைய இந்த இளம் வீரர் சற்று வித்தியாசமான துடுப்பாட்ட திறமையைக் கொண்டவர். தனது 13ஆவது வயதில் கிரிக்கெட்டிற்கு காலடி எடுத்து வைத்த அவர், இன்றுவரை உள்ளூர் மட்டப் போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்றார். அதேபோல, தனது 15ஆவது வயதில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய அந்த வீரர்தான் பெதும் நிஸ்ஸங்க.
இவருடைய பெயரை பெரிதாக எவரும் கேட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம், சதகளையும் குவித்துள்ள பெதும் நிஸ்ஸங்க தனக்கென்ற பெயரை முத்திரை பதித்துவிட்டார்.
பெதும் நிஸங்கவின் இரட்டைச்சதத்தினால் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் இலங்கை A வசம்
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி …
தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்காவிட்டாலும், உள்ளூரில் மூன்றுவகை போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, ஓட்டங்களைக் குவிக்கின்ற திறமை பெதும் நிஸ்ஸங்கவிடம் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் மேஜர் ப்ரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் என்.சி.சி அணிக்காக விளையாடிவரும் பெதும் நிஸ்ஸங்க, இராணுவ அணியுடன் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற போட்டியில் முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி இரட்டைச் சதமடித்து புதிய மைல்கல்லை எட்டினார். அதேபோல, இறுதியாக நடைபெற்ற சோனகர் கழகத்துடனான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும், 2ஆவது இன்னிங்ஸில் 84 ஓட்டங்களையும் குவித்து துடுப்பாட்டத்தில் மிரள வைத்தார்.
அதுமாத்திரமின்றி, தற்போது நடைபெற்று வருகின்ற மேஜர் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் 5 வாரங்கள் நிறைவடையும் போது துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் இடம்பிடித்திருந்தார். எனினும் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பெதும் நிஸ்ஸங்க, ஒரு இரட்டைச் சதம், 2 சதங்கள், மற்றும் 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 603 ஓட்டங்களைப் குவித்திருந்தார்.
மேலும், கடைசியாக நடைபெற்ற 12 முதல்தரப் போட்டிகளில் 165, 95, 31, 5, 14, 35, 217, 4, 26, 84 மற்றும் 163 ஓட்டங்களைக் குவித்துள்ள பெதும் நிஸ்ஸங்க, 66.45 என்ற ஓட்ட சராசரியையும் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் 1000 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரராகவும் நிஸ்ஸங்க இடம்பிடித்தார்.
கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இறுதி வாரத்துக்கான போட்டியில் களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க, 119 ஓட்டங்களைக் குவித்தார்.
ஆனால், என்.சி.சி கழகத்துக்காக விளையாடுவதற்கு முன் பெத்தும் நிஸ்ஸங்க, பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடியிருந்தார். அக் கழகத்துக்காக விளையாடிய போது 2 சதங்களுடன் 700 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார். அதன்காரணமாக, கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவ்வணியுடனான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெதும் நிஸ்ஸங்க பெற்றுக்கொண்டார். ஆனால், அப்போட்டியில் பெதும் நிஸ்ஸங்கவுக்கு துரதிஷ்டவசமாக சம்பவமொன்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
அந்தப் போட்டியின், இரண்டாம் நாளன்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அடித்தாடிய பந்து, பெதும் நிஸ்ஸங்கவின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் நிஸ்ஸங்க நிலை தடுமாறி மைதானத்தில் விழுந்தார். பின்னர் அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக அவரை மைதானத்தில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதன்போது, நிஸ்ஸங்கவுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவரது நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், அதற்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 10ஆவது வீரராகக் களமிறங்கிய அவருக்கு 29 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
NCC அணிக்காக இரட்டைச் சதமடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர ….
இதேநேரம், அயர்லாந்து ஏ அணியுடன் கடந்த 05ஆம் திகதி ஆரம்பமாகிய நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இலங்கை ஏ அணியிலும் இடம்பெற்றிருந்த பெதும் நிஸ்ஸங்க, அவ்வணியுடனான முதலவாது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ஓட்டங்களையும், 2ஆவது இன்னிங்ஸில் 50 ஓட்டங்களையும் குவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் பெதும் நிஸ்ஸங்க பெற்றுக்கொண்ட அபார சதத்தின் உதவியுடன் குறித்த போட்டித் தொடரை இலங்கை ஏ அணி சமநிலைப்படுத்தி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை 1-0 என கைப்பற்றியது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த முறையில் துடுப்பாடிய பெதும் நிஸ்ஸங்க இரட்டைச்சதம் அடித்து அசத்தினார் இதில் 28 பௌண்டரிகள் அடங்கலாக 274 பந்துகளில் 217 ஓட்டங்களைக் குவித்து இலங்கை ஏ அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
தொடர்ந்து ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்ற பெதும் நிஸ்ஸங்க போட்டியின் பிறகு கருத்து தெரிவிக்கையில், ”கடந்த 2 மாதங்களாக வெளிப்படுத்து வருகின்ற திறமைகள் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனது கழகத்துக்காக 4ஆவது இலக்கத்தில் களமிறங்கினாலும், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த அயர்லாந்து ஏ அணியுடனான போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியிருந்தேன். எனினும், எந்த இடத்திலும் துடுப்பாட நான் தயாராக உள்ளேன். அதேபோல அணிக்குத் தேவையான நேரத்தில் ஓட்டங்களையும் குவிக்க எதிர்பார்த்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, அயர்லாந்து ஏ அணியுடனான போட்டியின் பிறகு பெதும் நிஸ்ஸங்கவின் திறமை குறித்து இலங்கை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன கருத்து வெளியிடுகையில்,
”இப்போட்டியில் அவர் வெளியே செல்லாமல் சிறப்பாக விளையாடியிருந்தார். நாங்கள் எப்போதும் அவர் திறமையான வீரர் என்று நினைக்கிறோம். அதேபோல, தனது வழமையான துடுப்பாட்ட போர்முக்கு திரும்பியவுடன் அதிக ஓட்டங்களைக் குவிக்கின்ற திறமை அவரிடம் உண்டு. இன்று இலங்கை அணியில் எந்தவொரு வீரரிடமும் இந்த திறமை கிடையாது. தற்போது தான் அவர் கழகமட்ட முதல்தர போட்டிகளில் விளையாடி வருகின்றார். அத்துடன், அண்மையில் தனது கன்னி இரட்டைச் சதத்தையும் பதிவுசெய்தார். 21 வயதுக்கு அந்த திறமை மிக அதிகம் என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
”இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் பொறுமை மற்றும் துடுப்பாட்டத்தை ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை பார்க்கிறேன். ஆனால், இந்த பையன் கௌஷாலின் பொறுமையைக் கொண்டிருக்கவில்லை. இவரின் துடுப்பாட்ட பிரயோகமும் மிகப் பெரியளவில் உள்ளது. அவருக்கு ட்ரைவ், புல் மற்றும் கட் போன்ற துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொள்ளும் திறமை உண்டு. அதேபோல, அவரிடம் எளிமையான துடுப்பாட்ட நுணுக்கங்களை காணமுடிகின்றதுடன், சுழல்பந்தை சிறந்த முறையில் கையாளுகின்ற ஆற்றலும் உண்டு. ஆகமொத்தத்தில் அவருடைய துடுப்பாட்டம் நிச்சயம் இலங்கை டெஸ்ட் அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பதுடன், 6 அல்லது 7 மாதங்களில் இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் அவர் இடம்பிடிப்பார்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இளம் வீரர் பத்தும் நிசங்கவுக்கு ஆபத்தில்லை
கொழும்பு, NCC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற ….
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பெதும் நிஸ்ஸங்க, தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை மத்திய கல்லூரியில் மேற்கொண்டார். 13 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆரம்பித்த அவர், 15ஆவது வயதில் மலேஷியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் முதற்தடவையாக இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்.
தனது 15ஆவது வயதில் மீபாவல அமரசூரிய கல்லூரி அணிக்கு எதிராக 109 ஓட்டங்களைப் பெற்று சதம் கடந்ததுடன் குறித்த இன்னிங்ஸில் 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட பெதும் நிஸ்ஸங்க, பாடசாலை அரங்கில் அதிவேக இரட்டைச் சதமடித்த வீரருக்கான சாதனையையும் படைத்தார்.
இதனையடுத்து முதன்முறையாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக தேர்வாகிய அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் போட்டியில் 172 ஓட்டங்களையும் எடுத்தார். தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி இளையோர் டெஸ்ட் தொடரை 1–0 எனவும், ஒருநாள் தொடரை 3-0 எனவும் கைப்பற்றி சாதனை படைத்தது. இதில் இலங்கை இளையோர் அணிக்காக பெதும் நிஸ்ஸங்க விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வறுமையையும் பொறுப்படுத்தாது தந்தையின் வழிகாட்டலுடன், மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தனது 13 ஆவது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்த பெதும் நிஸ்ஸங்க, இன்று இலங்கையின் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார். உள்ளூர் மட்டப் போட்டிகளில் சதங்களை அடுத்தடுத்து குவித்து வருகின்ற பெதும் நிஸ்ஸங்கவுக்கு இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு வெகு விரைவில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<