IPL இல் பெட் கம்மின்ஸ் புதிய சாதனை

Indian Premier League 2022

218

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அதிவேக அரைச்சதமடித்த வீரர் என்ற சாதனையை கே.எல் ராகுல் உடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பெட் கம்மின்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 15ஆவது அத்தியாயம் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (07) இரவு நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தா அணியின் அழைப்பிற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சூர்யகுமார் யாதவ்வின் அரைச்சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி, 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் தடுமாறினாலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் அரைச்சதம் கடந்து அசத்தினார்.

பின்னர் அவருடன் இணைந்து பெட் கம்மின்ஸ் தனது பங்கிற்கு சிக்ஸர் பௌண்டரிகளாக பந்தை பறக்கவிட்டார். டேனியல் சம்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ஓட்டங்கள் குவித்து 14 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணிக்காக துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த பெட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அத்துடன், இந்தப் போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைச்சதம் அடித்ததன் மூலம் IPL போட்டிகள் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கே.எல் ராகுல் உடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக 2018இல் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைச்சதமடித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் 15 பந்துகளில் அரைச்சதமடித்து யூசுப் பதான் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் அடுத்தடுத்த இங்களில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான பெட் கம்மின்ஸை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது.பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் நடப்பு IPL தொடரில் கொல்கத்தா விளையாடிய முதல் 3 போட்டிகளில் கம்மின்ஸ் விளையாடவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து திரும்பி, நைட் ரைடர்ஸ் அணியினருடன் இணைந்த அவர், நேற்று (07) மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த போதிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, நடப்புத் தொடரில் தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ள பெட் கம்மின்ஸ், இதற்கு முன்னதாக IPL கிரிக்கெட்டில் இரண்டு முறை அரைச்சதம் அடித்துள்ளார். இதுவரை 37 IPL போட்டிகளில் துடுப்பெடுத்தாடியுள்ள அவர், பௌண்டரிகளைக் காட்டிலும் சிக்ஸர்களே அதிகம் விளாசியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது மட்டுமின்றி மொத்தமாக 5 விருதுகளையும் அவர் தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<