அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20i அணிகளின் தலைவராக கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச், அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து T20i போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் தனது ஓய்வு அறிக்கையில் குறிப்பிட்டார். இதனையடுத்து அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி நிலவிவந்தது.
முன்னதாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் பெட் கம்மின்ஸையே ஒருநாள் அணிக்கும் தலைவராக நியமிக்கலாம் என்று ஆரோன் பின்ச் கூறியிருந்தார். ஆனால் கம்மின்ஸ் டெஸ்ட் அணியின் தலைவராக மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிகளின் தலைமைத்துவத்தை ஏற்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல் வெளியானது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைவராக அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், அனுபவ வீரருமான டேவிட் வோர்னர் நியமிக்கப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தன. ஆனாலும் அவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் தடைக்குள்ளாகி மீண்டும் அணிக்கு திரும்பிய காரணத்தால் அவரை தலைவராக நியமிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
- அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் முன்னணி வீரர்கள்!
- அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் ஸ்டொயினிஸ்!
- இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணி; போட்டி அட்டவணை வெளியானது!
இந்த நிலையில், 29 வயதான பெட் கம்மின்ஸ் அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தவைராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செவ்வாய்க்கிழமை (18) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2021 நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பெட் கம்மின்ஸ், தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய ஒருநாள் அணியை வழிநடத்தும் 27ஆவது தலைவர் எனும் பெருமையையும் பெட் கம்மின்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளுக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து கம்மின்ஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
‘ஆரோன் பின்ச் தலைமையில் நான் விளையாடியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அவரின் தலைமையில் எண்ணற்ற அனுபவங்களையும் நுணுக்கங்களையும் நான் பெற்றிருக்கிறேன். அவரைப் போன்ற சிறந்த வீரர்களின் இடத்திற்கு வருவதை நினைத்து பெருமிதமாக எண்ணுகிறேன். பின்ச் தலைமையில் தான் நான் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறேன். ஆகையால் நிச்சயம் அவரது இடத்தை நிரப்புவதற்கு என்னால் முடிந்ததை செய்வேன்.’ என்றார்.
இது குறித்து அவுஸ்திரேலிய தேர்வுக்குழுவின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி கூறுகையில்,
‘பெட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தலைவர் பொறுப்பை ஏற்று விளையாடியதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு, இவரை நியமித்தால் சரியாக இருக்கும் என்று தேர்வுக்கு குழுவினர் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்தோம்’ என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இதனிடையே, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் முதல் பெட் கம்மின்ஸ் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஒரு சகலதுறை வீரராக ஜொலித்து வருகின்ற பெட் கம்மின்ஸ், இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 324 ஓட்டங்களும் அடங்கும். அதேபோல, 43 டெஸ்ட் மற்றும் 46 T20i போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<