இலங்கையின் இரு கனிஷ்ட தடகள வீராங்கனைகளான தடைதாண்டல் ஓட்ட வீராங்கனை (Steeple chaser) பாரமி வசந்தி மற்றும் 800 மீற்றர் ஓட்ட வீராங்கனை டிலிஷி குமாரசிங்கவின் பங்கேற்புடன் 20 வயதுக்கு உட்பட்ட IAAF உலக சம்பியன்சிப் போட்டிகள் பின்லாந்தின் டேம்பியர் நகரில் இன்று ஆரம்பமானது. ஐந்து நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாளில் இந்த இரு வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
>> இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை வீரர்கள் விபரம்
பாரமி கனிஷ்ட தேசிய சாதனை
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெலா 20 வயதுக்கு உட்பட்ட IAAF உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் இன்று முதலாவதாக களமிறங்கினார். அவர் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றின் இரண்டாவது பந்தயத்தில் பங்கேற்றார்.
18 வயதான பாரமி தன்னை விடவும் இரண்டு வயது மூத்த வீராங்கனைகளுடன் போட்டியிட்டு சிறந்த முதிர்ச்சி மற்றும் உறுதித் தன்மையை வெளிப்படுத்தி 5ஆவது இடத்தை பிடித்தார். எனினும் அவர் 10:20.12 என தனது சிறந்த காலத்தை பதிவு செய்ததோடு இது இலங்கையின் கனிஷ்ட தேசிய சாதனையாகவும் அமைந்தது. எவ்வாறாயினும் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) நடைபெறவிருக்கும் இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதில் முதல் சுற்று ஆரம்ப பந்தயங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மற்றும் ஆறு சிறந்த காலத்தை வெளிப்படுத்திய வீராங்கனைகளே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். பஹ்ரைனை பிரதிநிதித்துவப்படுத்திய ஆபிரிக்க பூர்வீகம் கொண்டவரான மியுடில் யுவி, பாரமி பங்கேற்ற போட்டியில் முதலிடத்தை பிடித்ததோடு எத்தியோப்பியாவின் அக்ரீ பெலசெவ் மற்றும் அமெரிக்காவின் கிறிஸ்லின் ஜியர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றனர்.
இதில் 20 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டியின் நடப்புச் சம்பியனும் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இரண்டாவது சிறந்த காலத்தை பதிவு செய்தவருமான செலிபின் ஷெஸ்போல் சிறப்பான திறமையை வெளிக்காட்டி ஆரம்ப சுற்றின் இரண்டாவது பந்தயத்தை 9:45.60 என்ற காலத்தில் முடித்து சிறந்த முன்னிலையை பதிவு செய்தார்.
எவ்வாறாயினும் ஆரம்ப சுற்றின் மூன்றாவது பந்தயத்தை ஒட்டுமொத்த போட்டியிலும் சிறந்த காலமான 9:35.34 நிமிடங்களில் முடித்து வெற்றி பெற்ற உகண்டா நாட்டின் தடகள வீராங்கனை பெருத் செமுடாய் அவருக்கு கடும் சவாலாக உள்ளார்.
ஜப்பானின் கிபுவில் அண்மையில் முடிவுற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஆசிய கனிஷ்ட சம்பியனான பாரமி இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய தகுதிகாண் சுற்றில் தொடர்ந்து சிறந்த திறமையை வெளிக்காட்டியுள்ளார். அவர் 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் ஆண்டின் சிறந்த காலத்தை வெளிக்காட்டி தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். ஆர்ஜன்டீனாவின் பியுனோஸ் ஏர்ஸில் (Buenos Aires) இந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல அவருக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
ஏமாற்றம் தந்த டிலிஷி
வலாலா ஏ ரத்நாயக்க கல்லூரியின் வளர்ந்து வரும் திறமையான டிலிஷி குமாரசிங்க ஆசிய கனிஷ்ட போட்டியில் தனிப்பட்ட சிறந்த காலத்துடன் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் இந்த போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் 4ஆவது பந்தயத்தில் போட்டியிட்டார். ஆசிய கனிஷ்ட போட்டியில் 2:04.53 நேரப்பதிவில் போட்டியை முடித்து தனது சிறந்த காலத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியை டிலிஷி நன்றாக ஆரம்பித்து முதல் 400 மீற்றர் தூரத்தை முன்னிலையில் ஓடினார். இரண்டாவது சுற்றுக்கு நுழைந்தபோது டிலிஷிக்கு ஏனைய வீராங்கனைகளிடம் இருந்து சவால் வந்தது. இதன்போது அவர் முன்னிலையில் இருக்கும் வீராங்கனைகளுடன் இணைந்து ஓட முயற்சித்தார். எனினும் அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது போல் தெரிந்தது. இதனால் அவர் பின்தங்கினார் கடைசியில் அவர் தனது பந்தயத்தை கடைசி வீராங்கனையாக முடித்தார்.
இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பான ஓட்ட வீரர் அருன தர்ஷன 400 மீற்றர் ஆரம்ப சுற்று போட்டியில் இலங்கை நேரப்படி நாளை (11) பிற்பகல் 1.50 மணிக்கு பங்கேற்கிறார்.
20 வயதுக்கு உட்பட்ட IAAF உலக சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்பான புதிய செய்திகளை தெரிந்துகொள்ள https://www.thepapare.com/athletics/ உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.