ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 29 வயதான பாலித்த பண்டார, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் இலங்கைக்காக களமிறங்கவுள்ளார்.
விஷேட தேவையுடையவர்களுக்கான F42 பிரிவில் அவர் பாரா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இது அவர் பற்றி ThePapare.com வழங்கும் பதிவு.
‘மெல்ல மெல்ல வந்த பெரிய பயணம் இது. ஆரம்ப காலத்தில் பயிற்சியாளர் கூட இல்லாமல் எனக்கு தெரிந்த வகையில் பயிற்சி பெற்று தேசிய மட்டத்திற்கு வந்தேன். பாராலிம்பிக் செல்ல முடிந்ததை இட்டு பெரும் மகிழ்ச்சியை உணர்கிறேன். எனது முதல் எதிர்பார்ப்பு எனது சிறந்த திறமையை வெளிப்படுத்துவது. அதற்கு பின்னர் பதக்கம் ஒன்றை நோக்கி செல்வது’ என்று பாலித்த பண்டார ThePapare.com உடன் பேச்சை ஆரம்பித்தார்.
மாத்தளை, பல்லேகமவில் பிறந்த பாலித்த பண்டார மூன்று பேரைக் கொண்ட குடும்பத்தில் மூத்த ஆண் பிள்ளை. பாலித்தவுக்கு மூத்த சகோதரி ஒருவரும், இளைய சகோதரர் ஒருவரும் இருக்கிறார்கள். பாலித்தவின் தந்தை எச்.ஜி. ரத்னபால. தொழிலாக விவசாய வேலைகளும், கல் உடைக்கும் தொழிலிடத்தில் கிடைக்கின்றவாறு வேலை பார்த்தார். தாய் தமயந்தா பொடிமெனிக்கே வெளிநாட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்தார்.
பாலித்த கற்றது மில்லவான மகா வித்தியாலயத்தில். பாடசாலையில் திறமையான கரப்பந்தாட்ட வீரர். மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் திறமை காட்டிய பாடசாலை அணியில் அவரும் இருந்தார்.
‘பாடசாலை காலத்தில் இருந்து எனது விருப்பமாக இருந்தது இராணுவத்தில் சேர்வது தான். வீட்டில் என்றால் விருப்பமே இருக்கவில்லை. என்றாலும் நான் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்தேன். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறினேன். அப்போது அம்மா வெளிநாட்டில் இருந்தார். அப்பா விட்டுக்கு வெளியில் வேலைக்காக போயிருந்தார். அதனால் எனது பயணத்திற்கு தடை போட யாரும் இருக்கவில்லை. தம்பிக்கும் அக்காவுக்கும் எதுவும் தெரியாது. பயிற்சிக்கு சென்ற பின்னரே வீட்டுக்கு அறிவித்தேன். அம்மாவும் அப்பாவும் எம்மூவருக்காகவும் அதிகம் கஷ்டப்பட்டார்கள். எப்படி இருந்தபோதும் வீட்டுக்கு பாராமாக இருக்க நான் விரும்பவில்லை. அதனாலேயே இராணுவத்தில் இணைந்தேன்.’
பாலித்தவின் இராணுவப் பயிற்சி இடம்பெற்றது கொத்மலையில். பின்னர் இலங்கை தேசிய பாதுகாப்பு படைப்பிரிவுடன் இணைந்து கிளிநொச்சி, செல்வநகர் சென்றார். அது தான் பாலித்தவின் முதல் பணியாக இருந்தது.
‘முகாமில் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் நாம் கரப்பந்தாட்டம் ஆடுவோம். நானும் அந்த அணியுடன் இணைந்துகொள்வேன். காலம் போகப்போக நான் ரெஜிமேன்ட் கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் ரெஜிமென்ட் அணிக்காக ஆடினேன்.’
இதற்கிடையே பாலித்தவுக்கு எதிர்பாராத சிக்கலுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அது 2013 ஆம் ஆண்டு. கரப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதும் சகவீரர் ஒருவர் பாலித்தவின் மீது விழுந்தார். அந்த விபத்து எவ்வளது பாரதூரமானது என்றால் பாலித்தவின் ஒரு கால் குறைபாட்டுக்கு உள்ளானது.
‘ஒன்றரை ஆண்டுகள் வரை காலுக்கு வைத்தியம் பார்த்தோம். ஆனால் சுகம் பெறவில்லை. ஒன்றும் செய்ய முடியாது, ஊன்றுகோல்களால் நடக்கும்படி மருத்துவர்கள் கூறினார்கள். இப்போது பிளேட் ஒன்று போடப்பட்டிருக்கிறது.’
பாலித்தவின் வாழ்வு அவநம்பிக்கைக்கு உள்ளாகிறது. இரு கால்களால் நின்று வாழ்வை கட்டி எழுப்ப வந்த பாலித்த இப்போது அந்தப் பயணத்தை உடல் குறைபாடு உடையவராகவே செல்ல வேண்டி இருந்தது. பாலித்தவின் தலைவிதி அப்படித்தான் எழுதி இருக்கின்றது போல். அதுவும் நல்லதற்கே என்று பாலித்த கருதினார்.
‘விபத்து இடம்பெற்ற ஆரம்பத்தில் எனக்கு எதுவும் நினைக்க முடியாமல் இருந்தது. அது எல்லோருக்கும் நடப்பதாக இருக்கக்கூடும். ஆனால், நான் ஒரு இராணுவ வீரன். இராணுவ வீரனாக ஏனையவர்களை விடவும் ஆளுமை இருக்கிறது. எந்த ஒரு துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் சக்தி இருக்கிறது. உறுதி இருக்கிறது. அந்த சக்தி காரணமாகத் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன. அன்று நான் விபத்தில் வீழ்ந்து விட்டேன் என்றால் நான் இன்றும் அப்படியே தான் இருந்திருப்பேன்.’
அதற்கு பின் பாலித்த குருநாகலில் அமைந்துள்ள தமது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வந்தார். வந்து சற்றுக் காலம் அங்கு உடல் குறைபாடு கொண்ட விளையாட்டுக் குழுவில் அங்கம் வகித்தார்.
‘எமக்குப் பொறுப்பாக இருந்தவர் டபிள்யு. ஜயசேன அவர்கள். சேர் மெய்வல்லுநர் பயிற்சியாளர். ஆனால் உடல் குறைபாட்டுக்கு அமைய என்னால் விருப்பமான விளையாட்டை விளையாட முடியாமல் இருந்தது. குண்டு எறிதல், பரிதிவட்டம் ஆகியவற்றைத் தான் தேர்வு செய்ய முடியுமாக இருந்தது. ஆனால் அந்த விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர் ஒருவர் இருக்கவில்லை. நான் இணையதளத்தில் இந்த இரண்டு விளையாட்டுகள் பற்றியும் தேடிப்பார்த்தேன். அவைகளை பார்த்து பயிற்சிகளில் ஈடுபட்டேன். அது இலகுவாக இருக்கவில்லை’ என்கிறார் பாலித்த.
இவ்வாறு பயிற்சியை ஆரம்பித்த பாலித்த முதல் முறை 2015 ஆம் ஆண்டு இராணுவ பாரா மெய்வல்லுநர் போட்டியில் களமிறங்கினார். அதில் பாலித்த குண்டெறிதல் போட்டியில் 8 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
‘உண்மையில் அது எனக்கு பெரிய விடயமாக இருந்தது. ஏனென்றால் எனக்கு பயிற்சியாளர் ஒருவர் இருக்கவில்லை. நான் குண்டெறிதல் விளையாட்டுப் பற்றி இணையதளத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். இது வீணான வேலை என்றும் அதனை கைவிட்டு வேறு விளையாட்டை தேர்வு செய்யும்படியும் சிலர் கூறினார்கள். ஆனால் நான் ஆரம்பித்ததை இடையே கைவிடவில்லை. மேலும் மேலும் தகவல்களை சேகரித்து தனியாக பயிற்சி பெற்றேன். போட்டியில் பங்கேற்றேன்.’
இந்த முயற்சியின் பிரதிபலனை பெற பாலித்தவால் அடுத்த ஆண்டு முடிந்தது. அது 2016 தேசிய பாரா மெய்வல்லுநர் போட்டியில் அந்த விளையாட்டில் அவர் மூன்றாவது இடத்தைப் பெற்றார். பின்னர் அந்த ஆண்டில் நடைபெற்ற இராணுவ பாரா மெய்வல்லநர் விளையாட்டு விழாவில் குண்டெறிதல் தவிர பரிதிவட்டம் எரிதலிலும் தங்கப் பதக்கத்தை வெல்ல பாலித்தவால் முடிந்தது.
‘இராணுவ வீரர் ஒருவராக என்னில் இருந்த ஆளுமை பற்றி நான் பெருமை கொள்கிறேன். அப்போதே எனக்கு குண்டெறிதல் அல்லது பரிதவட்டம் எரிதல் பற்றி கற்றுத் தருவதற்கு யாரும் இருக்கவில்லை. இதற்கிடையே எனக்கு 2017 ஆம் ஆண்டு அநுராதபுரம் போக வேண்டி ஏற்பட்டது. அங்கு அநுரகுமார சேரை சந்தித்தேன். அவர் மெய்வல்லுநர் பயிற்சியாளர். ஆனால் நான் சேரிடம் 2 மாதங்கள் வரை இருந்தேன். 2 மாங்கள் சென்ற பின்னர் எனக்கு மீண்டும் குருநாகல் வரவேண்டி ஏற்பட்டது. மீண்டும் பயிற்சியாளர் ஒருவர் இன்றி பயிற்சி பெற வேண்டி ஏற்பட்டது.’
அதன் பின்னர் தீர்க்கமான போட்டிக் காலம் வந்தது. 2018 ஆசிய பாரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்காக தேர்வு செய்யும் போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாலித்தவுக்கு இந்த போட்டிகளில் பயிற்சியாளர் ஒருவர் இன்றியே பங்கேற்க வேண்டி இருந்தது.
அந்தத் தீர்க்கமான போட்டியில் பாலித்த 11.8 மீற்றர் எறிந்து குண்டெறிதலில் முதலாம் இடத்தை பெற்று ஆசிய பாரா மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். அதன் பின் அந்த ஆண்டின் இடம்பெற்ற இராணுவ பாரா விளையாட்டு விழாவில் பரிதிவட்டம் எறிதலில் 40.30 மீற்றர் திறமையைக் காட்டியும், குண்டு எறிதலில் 12.8 மீற்றர் திறமையைக் காட்டியும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
- பாராலிம்பிக் பதக்க கனவுடன் உள்ள சுரேஷ்
- அனுபவ வீரராக டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் சம்பத்
- பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது
- வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க
- பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி
அது தவிர அவர் ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அந்த திறமைகளுடன் இராணுவ பாரா மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் அந்த ஆண்டின் சிறந்த வீரராக விருது வென்றார்.
‘அந்தத் திறமையுடன் பாராலிம்பிக் குழு என்னை அழைத்து, பயிற்சியாளர் ஒருவரை பெற்றுத் தருவதாகவும் கொழும்புக்கு வரும்படியும் கூறியது. அதன்படி எனக்கு பிரதீப் நிசாந்த சேரிடம் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலத்தில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய பாரா போட்டியில் பங்கேற்றேன். அதில் குண்டு எறிதல் போட்டியில் 13.21 மீற்றர் வீசி திறமையை காண்பித்து தங்கப் பதக்கத்தை வென்றேன். அதற்கு பின்னர் 2019 டுபாயில் இடம்பெற்ற உலக பாரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 12.37 மீற்றர் திறமையை காண்பித்து 8 ஆவது இடத்தை பெற்றேன்.’
அன்று வரையான குறுகிய காலத்திற்குள் பிரதீப் நிசாந்தவிடம் பயிற்சியை பெற்ற பாலித்த அது தொடக்கம் பயிற்சியாளராக தேர்வு செய்தவர் பிரபாத் தனுஷ்க பெரேரா. அவரின் கீழ் பயிற்சி பெற்ற பாலித்த 2020 டிசம்பர் மாதம் இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 13.59 மீற்றர் திறமையை வெளிப்படுத்தினார்.
இதன்படி அவர் டுபாயில் இடம்பெற்ற World Para Athletics Grand Prix போட்டிக்கு பங்கேற்று 13.42 மீற்றர் திறமையை காண்பித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதன் பின்னர் பாராலிம்பிக் தகுதி பெறுவதற்கான போட்டியில் 13.85 மீற்றர் திறமையை காட்டி அதற்கும் தகுதியை பெற்றார்.
‘பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் விளையாட்டை கற்று இவ்வளவு தூரம் வந்த பயணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். குண்டு எறிதல் போட்டியின் பாரா வீரர்களில் நான் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளேன். இவ்வாறு வந்த பயணத்தில் எனக்கு உதவிய பலர் இருக்கிறார்கள். குறிப்பாக எனது படையணியின் அனைவரும், விளையாட்டு அமைச்சர் மற்றும் விளையாட்டு அமைச்சு, பாராலிம்பிக் குழு மற்றும் பயிற்சியாளர்கள் முக்கியமானவர்கள்.’
இவர்கள் அனைவரையும் தவிர பாலித்தவின் தாய், தந்தை உட்பட குடும்பத்தின் அனைவரும் மனைவி உதயாங்கி கோசல மற்றும் அவரின் குடும்பத்தின் அனைவரும் மற்றும் அன்புக்குரிய பிள்ளைகளும் நெருக்கமாக இருந்து தருகின்ற ஆதரவும் தமது அபரிமிதமான பயணத்திற்கு நம்பிக்கை தந்ததாக குறிப்பிடுகிறார்.
‘பதக்கம் ஒன்றை வெல்வதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் இது ஆரம்பம் மாத்திரம் தான். முடியுமான வரை இந்தப் போட்டியில் தாய்நாட்டிக்கு கௌரவத்தை வழங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்’ என்று பாலித்த உறுதியாக நம்புகிறார்.
பாராலிம்பிக் கலத்தில் இலங்கையின் பெயரை ஒலிக்கச் செய்ய பாலித்த பண்டாரவுக்கு ThePapare.com வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களை உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com உடன் இணைந்திருங்கள்.
>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு <<