விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கராத்தே போட்டிகளின் தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அத்துடன், இம்முறை தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த ஜூன் 30, ஜூலை 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் ஆண்களுக்கான தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் பங்குகொண்ட எஸ். பாலுராஜ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 2012ஆம் ஆண்டு முதல் தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்த பாலுராஜ், இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக 9ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
அத்துடன், 4ஆவது தடவையாக சிறந்த வீரருக்கான விருதையும் பாலுராஜ் தட்டிச் சென்றார். முன்னதாக, அவர் 2014, 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
- தேசிய கராத்தேவில் 8ஆவது தடவையாக பதக்கம் வென்ற பாலுராஜ்
- SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்
கல்முனை, சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ், 2006ஆம் ஆண்டு முதல் தேசிய மட்ட கராத்தே போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றார்.
கடந்த 2014, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக இடம்பிடித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்சியாளராக எஸ். பாலுராஜ் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 47ஆவது தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கொண்ட
சு. துஷ்யந்தன் குமிட்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, காட்டா குழுநிலைப் போட்டியில் கிழக்கு மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<