ஜப்பானின் கோபேயில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F63 பிரிவு குண்டு எறிதலில் இலங்கையின் பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான நேற்று (25) நடைபெற்ற ஆண்களுக்கான F63 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட பாலித்த பண்டார, 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப் போட்டியில் பெரிய பிரித்தானியாவின் அலெட் டேவிஸ் 15.60 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தையும், குவைத் வீரர் பைஸால் சொரூர் 14.84 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இதனிடையே, நேற்று நிறைவுக்கு வந்த உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதில் ஆண்களுக்கான F64 பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தையும், T44 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்திக்க கமகே வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
- உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார் சமித்த துலான்
- கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 21 வீரர்கள்
இதனிடையே, ஆண்களுக்கான F46 பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர பரா வீரர் தினேஷ் ப்ரியன்த 64.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
ஆனால், மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தும் பிரிவுக்கமைய தினேஷ் ப்ரியன்த கு46 வகைப்படுத்தல் பிரிவில் போட்டியிட தகுதியற்றவர் எனத் தெரிவித்து, இந்தியா பரா மெய்வல்லுனர்கள் சார்பில் அந்நாட்டு பரா மெய்வல்லுநர் சங்கம் மேன்முறையீடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தினேஷ் ப்ரியன்தவின் அவயவங்களை பதிவுசெய்த ஒளிநாடா ஆகியவற்றை மேன்முறையீட்டு விசாரணைக் குழுவினர் பரிசீலித்ததுடன், தினேஷ் ப்ரியன்த F46 பிரிவுக்கு உரித்துடையவர் அல்லர் என மேன்முறையீட்டு விசாரணைக் குழுவினர் தீர்மானித்தனர்.
எனவே, குறித்த போட்டியில் இருந்து தினேஷ் ப்ரியன்த ஹேரத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக்கில் பங்குபற்றவிருந்த வாய்ப்பையும் இழந்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<