பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 2020 பங்கபந்து தங்கக் கிண்ண குழுநிலை போட்டியில் இலங்கை அணி கடைசி நேரத்தில் விட்டுக்கொடுத்த கோல்கள் மூலம் பலஸ்தீனத்திடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
பலஸ்தீன அணி பந்தை தன்வசம் வைத்துக்கொண்டு தாக்குதல் ஆட்டம் ஒன்றுடன் ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை அணி தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமிப்பது இலங்கை அணிக்கு மிக அரிதான ஒன்றாக இருந்தது. எனினும் ஆரம்ப சில நிமிடங்களில் இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Video – Vantage FA கிண்ண காலிறுதி குறித்த சிறப்பு பார்வை
Vantage FA கிண்ண கால்பந்து தொடரில்….
போட்டியில் முதல் கோல் முயற்சியாக 17 ஆவது நிமிடத்தில் பலஸ்தீன வீரர் மஹ்மூத் அபூவர்தா ப்ரீ கிக் மூலம் உதைந்த பந்து பெனால்டி பெட்டிக்குள் இருந்த ரீபால் தஹம்சியிடம் செல்ல அவர் தலையால் முட்டியபோது கோல்கம்பத்துக்கு வெளியால் சென்றது.
முதல் பாதி முடிவுறும் தறுவாயில் இலங்கை அணிக்கு நெருக்கமான தூரத்தில் ப்ரீ கிக் ஒன்று கிடைத்த நிலையில் வசீம் ராசீக் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டும்படாமலும் வெளியேறியது.
முதல் பாதி: பலஸ்தீன் 0 – 0 இலங்கை
பந்தை வலையில் செலுத்துவதில் இரு அணிகளும் தொடர்ந்து தவறிய நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் கோல்கள் இன்றி போட்டி தொடர்ந்தது.
பலஸ்தீன அணி இலங்கை கோல்கம்பத்தை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த நிலையில் ருவன் அருணசிரி சிறப்பான சில தடுப்புகளைச் செய்ததோடு இலங்கையின் உறுதியான தற்காப்பு ஆட்டம் பலஸ்தீன முன்களத்திற்கு பெரும் சவாலாக மாறியிருந்தது. பலஸ்தீன வீரர்களின் திட்டங்கள் சிதறிய நிலையில் போட்டி சமநிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
போட்டியின் முழு நேரத்திலும் தற்காப்பு ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள் காயமுறிப்பு நேரத்தில் இழைத்த தவறுகளால் போட்டியை தவறவிட நேர்ந்தது. இடது பக்கம் இருந்து சமிஹ் மராப் அபாரமாக பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டியில் யாரும் அவதானிக்கப்படாத இடத்தில் இருந்த மஹ்மூத் அபூவர்தா பாய்ந்து தலையால் முட்டி பலஸ்தீனத்திற்கு முதல் கோலை பெற்றார்.
பங்கபந்து தங்க கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் புதிய வீரர்கள்
பங்களாதேஷில் இந்த மாதம் 15ஆம் திகதி….
இந்நிலையில் இலங்கை அணி பதில் கோல் திருப்பும் முயற்சியாக எதிரணி கோல் எல்லை பக்கம் முன்னேறிய நிலையில், இலங்கை தற்காப்பு அரண் பலவீனம் அடைந்ததை பயன்படுத்திக் கொண்ட பலஸ்தீன அணி பதிலடியாக காலித் சலம் மூலம் இரண்டாவது கோலை புகுத்தியது.
இந்த வெற்றியுடன் நடப்புச் சம்பியன் பலஸ்தீன அணி தனது இரு குழு நிலை போட்டிகளிலும் வெற்றியீட்டி மொத்தம் ஆறு புள்ளிகளுடன் பங்கபந்து தங்கக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.
பலஸ்தீன அணி தனது முதல் குழுநிலை போட்டியில் போட்டியை நடாத்தும் அணியான பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. இதன்படி இலங்கை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) டக்கா, பங்கபந்து சர்வதேச அரங்கில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: பலஸ்தீனம் 2 – 0 இலங்கை
கோல் பெற்றவர்கள்
- பலஸ்தீன் – மஹ்மூத் அபூவர்தா 90+3’, காலித் சலம் 90+6
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<