இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பக்கீர் அலி

687

இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலியை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்துள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரக்குழுவும், ரோஹித்த பெர்னாந்து மற்றும் மேஜர் ஜெனரல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான தேசிய கால்பந்து அணியின் முகாமைத்துவ குழுவும் மிகவும் கவனமாக கலந்தாலோசித்து எடுத்த முடிவின் பின்னரே, பக்கீர் அலியினை தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL)…

அந்த வகையில், பக்கீர் அலி அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கை கால்பந்து அணியின் பயிற்சியாளராக செயற்பட ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

“நிசாம் பக்கீர் அலி அவர்களை இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்ததை கூறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையின் கால்பந்து துறைக்கு பாரிய சேவைகள் செய்த ஒரு நபராக அவர் இருந்த போதிலும், அவரது திறமையினையும், ஆற்றலினையும் சரியான முறையில் வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் இன்னும் வழங்கப்படவில்லை.

அவரை (பக்கீர் அலியினை) தலைமை பயிற்சியாளராக மாற்றுவதற்குரிய அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியிருக்கின்றன. அவர் மாலைதீவிலிருந்து வந்து நாம் செய்து வைத்திருக்கும் உடன்படிக்கை பத்திரத்தில் கையொப்பம் இடுவது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.“ என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா ThePapare.com இற்கு பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“நாங்கள் இந்தப் பதவிக்காக முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்களான டட்லி ஸ்டெய்ன்வோல், சம்பத் பெரேரா ஆகியோரின் பெயர்களையும் பரிசீலனை செய்திருந்தோம். எனினும் அவர்களின் கடந்த கால பதிவுகள் எதுவும் எம்மை திருப்திப்படுத்தவில்லை. அதோடு, இன்னும் சில பயிற்சியாளர்களையும் கவனத்தில் எடுத்தோம். அவர்களில் எவருக்கும், பயிற்றுவிப்பாளருக்கு இருக்க வேண்டிய “A” தரத்திலான சான்றிதழ் இருக்கவில்லை என அனுர டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் டட்லி ஸ்டெய்ன்வோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகியதிலிருந்து இலங்கை கால்பந்து அணியானது தலைமை பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் இன்றுவரை காணப்படுகின்றது. ஸ்டெய்ன்வோலோடு சேர்த்து தேசிய அணியின் உதவி பயிற்சியாளர் தேவசகாயம் ராஜமணி மற்றும் கோல்காப்பு பயிற்சியாளர் மஹிந்த கலகெதர ஆகியோரும் தங்களது பொறுப்புக்களிலிருந்து அப்போது நீக்கப்பட்டனர்.

“நான் கால்பந்து சம்மேளன (FFSL) தலைவர்  அனுர டி சில்வா அவர்களுக்கும், அதன் நிர்வாக உறுப்பினர்களுக்கும் தேசிய அணியின் முகாமைத்துவ குழுவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களோடு எனக்கு இலங்கை கால்பந்து அணியின் பயிற்சியாளராக மாற ஆதரவு வழங்கிய அனைத்து கனவான்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். “

“இலங்கை கால்பந்து அணிக்காக சேவை புரிய மிகவும் விரைவாக நாடு திரும்ப இருக்கின்றேன். என்னுடைய நீண்ட நாள் கனவு நிஜமாகியிருக்கின்றது. இன்னுமொருதடவை எனது கனவினை நிஜமாக்க ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எப்போதும் என்னை நம்பியவர்களை கீழே கொண்டு சென்று விட மாட்டேன். எங்களை உங்களது பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்வதோடு தொடர்ந்து ஆதரவினையும் வழங்குங்கள்.“  என பக்கீர் அலி சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புதிய பொறுப்பு பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

மாத்தளையைப் பிறப்பிடமாக கொண்ட பக்கீர் அலி, எப்போதும் திடகாத்திரமாக இருப்பதனால் “Fitness Freak“ என்னும் பெயர் மூலம் அனைவராலும் அழைக்கப்படுகின்ற ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கொழும்பு யோர்க் கழகத்துக்காக விளையாடிய இவர், 1976 ஆம் ஆண்டு சுமித் வல்பொலவின் தலைமையின் கீழ் இலங்கை அணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தார். 1980ஆம் ஆண்டில் இலங்கை கால்பந்து அணியின் தலைவராகவும் செயற்பட்ட பக்கீர் அலி பிற்காலத்தில் தொழில்முறை கால்பந்து விளையாட பங்களாதேஷ் பயணமாகியிருந்தார்.

தன்னுடைய வாழ்க்கையில் கால்பந்து வீரர் என்கிற பாகத்தினை முடித்துக் கொண்ட பக்கீர் அலி, அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பயிற்சியாளர்களுக்கான B தர சான்றிதழை பெற்றுக் கொண்டு, தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் A தர சான்றிதழையும் பெற்றார்.

வர்த்தக புட்சால் சம்பியன் கிண்ணத்தை வென்ற எல்.பி. பினான்ஸ் அணி

புட்சால் வேல்டில் (Futsal world)…

பின்னர் மாலைதீவில் சில கால்பந்து கழகங்களுக்கு பயிற்சி வழங்கிய பக்கீர் அலி, 2013 ஆம் ஆண்டில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துறைசார் இயக்குனராகவும் பொறுப்பு வகித்திருந்தார்.  எனினும் முகாமைத்துவ சிக்கல்கள் காரணமாக பக்கீர் அலியினால் குறுகிய காலத்திற்கே இலங்கை கால்பந்து சம்மேனத்திற்கு கடமைபுரிய இயலுமாக இருந்தது.

“நாங்கள் புதிய பயிற்சியாளரிடம் (தேசிய அணிக்கான) நீண்ட மற்றும் குறுகிய காலத் திட்டங்கள் தொடர்பில் கேட்கவிருக்கின்றோம். ஆனால், எங்கள் இப்போதைய இலக்கு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கிருக்கின்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் தான்” என கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் புதிய பயிற்சியாளரிடம் தாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றி கூறியிருந்தார்.  

“எது எவ்வாறாயினும், நாங்கள் இப்போது வெளிநாட்டினைச் சேர்ந்த ஒரு ஆலோசகரையும் எதிர்பார்க்கின்றோம். அப்படியான ஒருவரின் மூலம் எங்களது துறைசார்ந்த (Technical) பகுதிகளினை விருத்தி செய்ய முடியும். புதிதாக வருகின்ற ஆலோசகர் பக்கீர் அலிக்கு அவரது கடமைகளினை சிறப்பாக நிறைவேற்ற உதவுவார். இவற்றோடு கால்பந்து சம்மேளனம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளினையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டி இருக்கின்றது.“ என டி சில்வா மேலதிகமாக தமக்கு இருக்கின்ற தேவைகள் பற்றி கூறியிருந்தார்.

தேசிய கால்பந்து அணியின் ஏனைய உதவியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தெரிவு, பக்கீர் அலி பயிற்சியாளர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெறவுள்ளது.