10ஆவது சதம் அடித்த அசார் அலி

277
eng v pak

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் இங்கிலாந்து அணியைத் துடுப்பாட அழைப்பு விடுத்தது.

இதன் படி தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 86 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக கெரி பேலன்ஸ் 70 ஓட்டங்களையும், மொய்ன் அலி 63 ஓட்டங்களையும், எலாஸ்டயர் குக் 45 ஓட்டங்களையும் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் வஹாப் ரியாஸிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சுஹைல் கான் மிகச் சிறப்பான முறையில் பந்து வீசி 5 விக்கட்டுகளை சாய்த்தார்.

இவரோடு ரஹத் அலி மற்றும் முஹமத் அமீர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் யசீர் ஷா 1 விக்கட்டையும் வீழ்த்தினார்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸை தொடங்கியது. முஹமத் ஹபீஸ், சமி அஸ்லாம் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை  ஜேம்ஸ் எண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் ஹபீஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து சமி அஸ்லாம் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஜேம்ஸ் எண்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட், க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டீபன் பின் ஆகிய பந்து வீச்சாளர்களின் புயல்வேகத்தை சமாளித்து ஓட்டங்களைச் சேர்த்தனர்.

அரைச் சதம் கடந்த இருவரும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சமி அஸ்லாம் துரதிருஷ்டவசமாக 82 ஓட்டங்களில்  “ரன் அவுட்” முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து யூனிஸ் கான் களம் இறங்கினார். அசார் அலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அசார் அலியின் 10-வது சதம் இதுவாகும்.

அசார் அலியின் அபார சதத்தால் பாகிஸ்தான் அணி 89.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களை பெற்று இருந்தது. 2ஆம் நாளின் இறுதி பந்தை க்றிஸ் வோக்ஸ் வீசினார்.

இந்த பந்தில் மிக அற்புதமாக ஆடி 139 ஓட்டங்களைப் பெற்று இருந்த அசார் அலி ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டு இருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக்கிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  யூனிஸ் கான் 21 ஓட்டங்களோடு களத்தில் உள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க  இங்கிலாந்து அணியை விட 40 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.  இங்கிலாந்து அணியின் சார்பாகப் பந்துவீச்சில் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் வீழ்த்தினர். போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 297/10

கெரி பேலன்ஸ் 70, மொயின் அலி 63, எலாஸ்டயர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ 39

சுஹைல் கான்  96/5, ரஹத் அலி 83/2, முஹமத் அமீர் 53/2

பாகிஸ்தான் – 257/3

அசார் அலி 139, சமி அஸ்லம் 82, யூனுஸ் கான் 21*

ஜேம்ஸ் எண்டர்சன் 32/1, க்றிஸ் வோக்ஸ் 52/1

பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகள் கையிருப்பில் 40 ஓட்டங்கள் பின்னிலையில்