நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உதிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரையில் குறைந்தது 350 பேர் வரையில் பலியாகியுள்ளதோடு, 500 பேர் வரையில் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும்……..
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறவிருந்த அனைத்து உள்ளூர் மட்ட விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், வெடிகுண்டுத் தாக்குதல்களினால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.
குறித்த தொடரை நடத்துவது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனம், புதிய திகதிகள் உறுதிப்படுத்தப்பட்டதும் அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என அந்நாட்டு கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இலங்கையின் பாதுகாப்பு குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் கிடைக்குமாயின் பாகிஸ்தான் அணியை இலங்கைக்கு அனுப்பிவைக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பாக். இளையோர் அணி அறிவிப்பு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள ……
எனினும், இப்போட்டித் தொடரை ஜூன் மாதம் வரை பிற்போடுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லலை. ஏனெனில் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி ஜூன் மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. எனவே, பாதுகாப்பு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான ஏற்பாடுகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 30ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<