கிரிக்கட் விளையாடும் முன்னணி நாடுகள் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முயற்சி செய்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்திற்கு எதிராக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்தியது. இந்த போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
அதன்பின் இந்தியா, நியூசிலாந்திற்கு எதிராக பகல் – இரவு போட்டியை நடத்த முயற்சி செய்தது. ஆனால், இந்தியாவில் பனிப்பொழிவு முக்கிய காரணமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன்பின் பாகிஸ்தான் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டது. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஓக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை விளையாடுகிறது. இதன் முதல் போட்டி 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை டுபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை பகல் – இரவு போட்டியாக நடத்த பாகிஸ்தான் விரும்பியது. இதற்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியும் சம்பதம் தெரிவித்ததால், பாகிஸ்தான் முதன்முறையாக பகல் – இரவு டெஸ்டில் விளையாட இருக்கிறது.
2ஆவது டெஸ்ட் அபுதாபியில் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையும், 3ஆவது மற்றும் கடைசிப் போட்டி ஷார்ஜாவில் 30ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரையும் நடக்க இருக்கிறது.
பகல் – இரவு டெஸ்ட் போட்டிக்கு முன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணி 3 நாட்கள் கொண்ட பகல் – இரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இதேவேளை இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் இந்தியா 110 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றதால் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது.
5 நாளில் இந்திய அணி தனது முதல் இடத்தைப் பறிகொடுத்தது. இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில் ‘‘கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறாமலும், இந்தியா போட்டியை சமநிலை செய்திருந்தால் இந்த நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். இரு அணிகளுக்கும் இடையில் உள்ள புள்ளி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருப்பதால் இது குறைந்த கால நீடிப்புதான். ஒரு டெஸ்ட் போட்டியை வைத்து மட்டுமல்ல, ஒரு சீசனை வைத்து நமக்கு நாமே மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
எங்களை விட மற்ற அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது. மற்ற அணிகளுடன் நம் அணியை ஒப்பிட அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். தரவரிசை ஏறும், இறங்கும். நாங்கள் தரவரிசைக்காக விளையாடவில்லை. உலகத்தின் சிறந்த அணியாக வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதுதான் எப்போதும் எங்களது இலட்சியம்’’ என்று அப்பட்டமாக கூறி உள்ளார்.