ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் நோமான் அலி

ICC Player of the Month Award

29

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அக்டோபர் மாதத்திற்கான அதிசிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமான் அலியும், அதிசிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமேலியா கேரும் வென்றுள்ளனர்.  

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கௌரவித்து வருகிறது. 

அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது. அந்தவகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது.  

இதில் வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் காகிசோ ரபாடா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நோமான் அலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை வென்றார். 

நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னெர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். இதுதவிர, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோமான் அலி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை நிலைய குலைய வைத்த நோமான் அலி, இந்த இரண்டு போட்டிகளிலும் 13.85 சராசரி உடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

இந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் நோமான் அலி வென்றுள்ளார்.  

இதுகுறித்து நோமான் அலி கூறுகையில், ‘இந்த மாதத்தின் ஐசிசி சிறந்த வீரராக தெரிவானதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும், இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க சொந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிய அனைத்து வீரர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்’ என்றார். 

அதேபோல, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் நியூசிலாந்தின் அமேலியா கேர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டியாண்டிரா டோட்டின் மற்றும் தெனனாப்பிரிக்க அணியின் லாரா வோல்வார்ட் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் அமேலியா கேர் இந்த விருதை வென்றுள்ளார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<