கொரோனாவால் பாகிஸ்தான், மே.தீவுகள் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

281
PCB

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 T20i, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும் கராச்சியில் நடைபெறுகின்றன. இதில் முதலில் நடைபெற்ற T20i தொடரை 3க்கு 0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், T20i தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ஷெல்டன் கொட்ரெல், ரொஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் உட்பட 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 5 பேருக்கு இன்று (16) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, விக்கெட் காப்பாளர் ஷேய் ஹோப், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன், சகலதுறை வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவிப் பயிற்சியாளர் ரொட்டி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் டாக்டர் அக்ஷய் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளின் கண்கானிப்பில் வைக்க பாகிஸ்தான் சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனவே, ஏற்கெனவே 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையும் இந்த விடயம் தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாளை தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (16) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இத்தொடர் ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருப்பதால், அடுத்தாண்டு ஜூன் முதல் வாரத்தில் இத்தொடர் மீண்டும் நடைபெறும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வியாழக்கிழமை காலை எஞ்சியுள்ள 15 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் 6 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 21 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கடைசி T20i போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது.

எனினும், இரு அணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மேற்கிந்திய தீவுகளிடமுள்ள வளங்களையும் கருத்தில் கொண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுப்பர் லீக்கின் ஓர் அங்கமான இந்த ஒருநாள் தொடரை 2022 ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிறது.

இதனிடையே, புதன் மற்றும் வியாழன் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே கடைசி T20i போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து புறப்படுகின்றனர். மற்றவர்கள் தனிமைக் காலத்தை முடித்த பிறகே புறப்படுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<