பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும், சுதந்திர கிண்ணத் தொடரின் (Independence Cup) மூன்றாவது T-20 போட்டியில் 33 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றியாளராக மாறியுள்ளதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-1 என கைப்பற்றியுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் வைத்து தீவிரவாதத் தாக்குதல் நடந்த காரணத்தினால் அதன் பின்னர் அந்நாட்டில் சென்று விளையாடுவதற்கு பல நாடுகள் மறுப்பு தெரிவித்திருந்தன. அந்த வகையில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டினை மீள கொண்டுவரும் நோக்கோடு இந்த T-20 தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
நடைபெற்று முடிந்த தொடரின் இரண்டு T-20 போட்டிகளிலும் உலக பதினொருவர் அணியும், பாகிஸ்தான் அணியும் ஒவ்வொரு வெற்றிகளை சுவீகரித்திருந்த காரணத்தினால், தொடரின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கும் மூன்றாவது முக்கியமான போட்டி பாகிஸ்தானின் லாஹூர் நகரில் ஆரம்பமாகியிருந்தது.
உலக பதினொருவர் அணியின் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியில், இரண்டாவது T-20 போட்டி போன்று ஆரம்ப வீரர் பக்கார் சமான் திருப்தியற்ற ஆட்டம் ஒன்றினை வெளிக்காட்டினார். பாகிஸ்தானின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நோக்கி நடந்த சமான் மேற்கிந்திய தீவுகள் அணியின் டர்ரேன் சமியினால் ரன் அவுட் செய்யப்பட்டிருந்த போது 25 பந்துகளிற்கு 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சமானின் விக்கெட்டினைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அஹ்மத் ஷேசாத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தமது அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தினை (102) வழங்கியிருந்தனர். இந்த இணைப்பாட்டத்தின் உறுதுணையோடு ஒரு திடமான நிலையினை பாகிஸ்தான் எட்டிக் கொண்டது.
அடுத்து பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அசாம் 31 பந்துகளினை எதிர்கொண்டு 5 பெளண்டரிகளுடன் 48 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
அசாமினை அடுத்து சிறிது நேரத்தில் ஷேசாத்தும் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றினை வெளிக்காட்டியிருந்த வேளையில் அவுஸ்திரேலிய வீரர்களான பென் கட்டிங் மற்றும் ஜோர்ஜ் பெய்லி ஆகியோரின் இணைந்த செயற்பாட்டினால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் சதம் ஒன்றினை விளாச மேலதிக சொற்ப ஓட்டங்களே தேவைப்பட்ட ஷேசாத் 89 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். 55 பந்துகளினை எதிர்கொண்ட ஷேசாத் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகளை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மத்திய வரிசை வீரர் சொஹைப் மலிக்கின் துரித கதியிலான ஆட்டத்துடன் (17*) முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
உலக பதினொருவர் அணியின் பந்து வீச்சில் இலங்கையின் திசர பெரேரா 37 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்..
வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 185 ஓட்டங்களினை 20 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய உலக பதினொருவர் அணியில் முன்வரிசை வீரர்கள் யாரும் இலக்கினை அடைவதற்காக பாரிய முயற்சிகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.
ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஹசிம் அம்லா அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதால் அவரால் நீண்டதொரு இன்னிங்சினை (21) வெளிப்படுத்த முடியாமல் போனது.
மத்திய வரிசை வீரர்களில் ஒருவராக தொடர்ந்து களம் நுழைந்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா அதிரடியாக சிறிது நேரம் ஆடியிருந்தார். இதனால், உலக பதினொருவர் அணி போட்டியினை சிறிது நேரம் தக்கவைத்திருந்தது. பாகிஸ்தானின் ரூமான் ரயிஸின் பந்து வீச்சில் ஆறாவது விக்கெட்டாக பெரேரா பறிபோன போது போட்டி மெல்ல மெல்ல பாகிஸ்தானின் பக்கம் மாறத் தொடங்கியது. திசர வெறும் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகளை விளாசி 32 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மறுமுனையில் உலக பதினொருவர் அணியின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லரும் ஆட்டமிழக்க போட்டியின் வெற்றியாளர்களாக பாகிஸ்தான் மாறுவது உறுதியானது.
இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்த உலக பதினொருவர் அணி 150 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
உலக பதினொருவர் அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லரும் 32 ஓட்டங்களினை குவிந்திருந்தார். அதேபோன்று, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹசன் அலி 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தனது சிறப்பு துடுப்பாட்டத்திற்காக அஹ்மத் ஷேசாத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். சுதந்திர கிண்ணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் பாகிஸ்தான் அணி அடுத்ததாக இம்மாதம் 28 ஆம் திகதி இலங்கையுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் அணி – 183/4 (20) அஹ்மத் ஷேசாத் 89(55), பாபர் அசாம் 48(17), திசர பெரேரா 37/2(4)
உலக பதினொருவர் அணி – 150/8 (20) திசர பெரேரா 32(13), டேவிட் மில்லர் 32(29), டேர்ரன் சம்மி 24(23)*, ஹஸன் அலி 28/2(4)
போட்டி முடிவு – பாகிஸ்தான் 33 ஓட்டங்களால் வெற்றி