இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரை சமன் செய்த பாகிஸ்தான்

271
Pakistan vs South Africa - 4th ODI
(Photo by Sydney Seshibedi/Gallo Images/Getty Images)

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இடம்பெற்று முடிந்திருக்கும், நான்காவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் இலகுவாக தென்னாபிரிக்காவை வீழ்த்தியுள்ளது.

இனவெறி கருத்து வெளியிட்ட சர்ப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு போட்டிகளில் தடை

இனவெறி கருத்து வெளியிட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர்…

மேலும் இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி, ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-2 என சமநிலை செய்துள்ளது.

ஜொஹன்னஸ்பேர்க் நகரில் ஆரம்பமான இந்த ஒரு நாள் போட்டியில், இனவெறி கருத்து வெளியிட்ட சர்ப்ராஸ் அஹ்மட் போட்டித்தடை பெற்றிருப்பதனால் பாகிஸ்தான் அணி, அனுபவ வீரர் சொஹைப் மலிக் மூலம் வழிநடாத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் புதிய தலைவர் சொஹைப் மலிக் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார்.

நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த தென்னாபிரிக்க அணி போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே தமது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டாக குயின்டன் டி கொக் ஓட்டமேதுமின்றி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர் தொடர்ந்தும் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அந்தவகையில் தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக வந்த ரீசா ஹென்ரிக்ஸ் (2), வன் டர் சேன் (18) மற்றும் டேவிட் மில்லர் (4) ஆகியோர் மிகவும் குறைவான ஓட்டங்கள் பெற்று ஏமாற்றம் தந்திருந்தனர்.

முன்வரிசை வீரர்களுடன் சேர்த்து தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனால், தென்னாபிரிக்க அணி 41 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து  164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை ஹஷிம் அம்லா 59 ஓட்டங்களுடன் பதிவு செய்ய அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் 57 ஓட்டங்களுடன் ஆறுதல் தந்திருந்தார்.

இதேநேரம் அட்டகசமான பந்துவீச்சினை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் சின்வாரி 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சதாப் கான் மற்றும் சஹீன் சாஹ் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, குறித்த இலக்கினை வெறும் 31.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அதனுடைய துடுப்பாட்டத்தில் இமாம் உல் ஹக் 91 பந்துகளில் அவரது 5ஆவது ஒரு நாள் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை குவிக்க, பக்கார் சமான்  44 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்தோடு பாபர் அசாமும் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

>> டி20 தொடருக்கான பாகிஸ்தான் தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

போட்டியின் ஆட்டநாயகன் விருது பாகிஸ்தான் அணியின் உஸ்மான் சின்வாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடர் சமநிலை அடைந்திருப்பதால், புதன்கிழமை (30) கேப்டவுனில் இடம்பெறவிருக்கும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியின் மூலமே தொடர் வெற்றியாளர் யார்? என்பது தீர்மானிக்கப்படவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 164 (41) – ஹஷிம் அம்லா 59(75), பாப் டு பிளேசிஸ் 57(76), உஸ்மான் சின்வாரி 35/4(7), சஹீன் சாஹ் அப்ரிடி 24/2(8), சதாப் கான் 42/2(9)

பாகிஸ்தான் – 168/2 (31.3) – இமாம்  உல் ஹக் 71(91), பக்கார் சமான் 44(44), பாபர் அசாம் 41*(53), இம்ரான் தாஹீர் 51/1(10)

முடிவு – பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<