சுற்றுலா நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 6
விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோல்வியுற்றிருந்த பாகிஸ்தான் அணி இவ்வெற்றியின் மூலம் அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
நேற்று (9) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜோர்ஜ் வோர்கர் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோர் களமிறங்கினர். எனினும் கொலின் மன்ரோ இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் 13 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவ்வணி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
போல்டின் ஹெட்ரிக் சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியுஸிலாந்து
பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜோர்ஜ் வோர்கர் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் இணைந்து 46 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை 28 ஓட்டங்களுடன் ஜோர்ஜ் வோர்கர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டொம் லதம் வந்த வேகத்திலேயே ஒரு ஓட்டத்துடன் அரங்கம் திரும்பினார். அதன் பின் ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இணைந்து சிறப்பாக விளையாடியிருந்த போதும் அவர்களால் பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் முறியடிக்கப்பட்டது. இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
210 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 54 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் லுக்கி பேர்குசன் வீசிய பௌன்சர் பந்து இமாம் உல் ஹக்கின் முகத்தை பதம் பார்த்ததன் விளைவாக அவர் மருத்துவ உதவிகளுக்காக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து பகர் சமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது. வெற்றிக்கு மேலும 55 ஓட்டங்கள் மாத்திரம் பெற வேண்டிய நிலையில் பகர் சமான் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதே ஓவரில் பாபர் அசாம் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணியின் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஹபீஸின் விவகாரத்தில் டெய்லருக்கு எதிராக கொந்தளிக்கும் சர்ப்ராஸ்
40.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் லுக்கி பேர்குசன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஷஹீன் அப்ரிடி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (11) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
நியூசிலாந்து – 209/9 (50) – ரொஸ் டெய்லர் 86*, ஹென்றி நிக்கோலஸ் 33, ஷஹீன் அப்ரிடி 38/4, ஹசன் அலி 59/2
பாகிஸ்தான் – 212/4 (40.3) – பகர் சமான் 88, பாபர் அசாம் 46, மொஹமட் ஹபீஸ் 27*, லுக்கி பேர்குசன் 60/3
முடிவு – பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க