இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் வெள்ளிக்கிழமை(22) தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் அலைஸ்டர் குக் சதம் அடித்து 105 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இது அவரின் 29ஆவது சதமாகும். குக்கை தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரூட் 141 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சனிக்கிழமை(23) 2ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய வோக்ஸ் அரைச்சதம் அடித்து 58 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ஓட்டங்களைக் கடந்தார்.
தொடர்ந்து பந்துகளை விளாசிய அவர் தனது 2ஆவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். 355 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டினார். ஸ்டோக்ஸ 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வகாப் ரியாஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட்டின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 400, 500 என உயர்ந்தது. இறுதியாக அணியின் ஓட்ட எண்ணிக்கை 577ஆக இருக்கும்போது ஜோ ரூட் 254 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அவரின் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது இங்கிலாந்து அணி 152.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அத்துடன் முதல் இனிங்ஸை முடித்துக்கொள்வதாக இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் அறிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும், அமிர் மற்றும் ரஹத் அலி தலா இரண்டு விக்கெட்டுகளும், யாசீர் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது.
பின் நேற்று தமது இன்னிங்க்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக்கின் அரைச்சசத்தின் உதவியின் மூலம் 198 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மிஸ்பா உல் ஹக் 51 ஓட்டங்களையும், வஹாப் ரியாஸ் 39 ஓட்டங்களையும், ஷான் மசூத் 39 ஓட்டங்களையும், சர்ப்பிரஸ் அஹமத் 26 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கட்டுகளைக் கைப்பற்ற பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
பின்னர் தமது 2ஆவது இனிங்ஸிற்காக ஆடி வரும் இங்கிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 98 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இங்கிலாந்து அணி சார்பாக 2ஆவது இனிங்ஸில் எலஸ்டயர் குக் 49 ஓட்டங்களோடும் ஜோ ரூட் 23 ஓட்டங்களோடும் ஆடுகளத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 24 ஓட்டங்களோடு ஆமிரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 489 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 589/8d
ஜோ ரூட் 254, அலைஸ்டர் குக் 105 , க்றிஸ் வோக்ஸ் 58, ஜொனி பெயர்ஸ்டோவ் 58, பென் ஸ்டோக்ஸ் 34
வஹாப் ரியாஸ் 106/3, முஹமத் அமீர் 89/2 , ரஹத் அலி 101/2
பாகிஸ்தான் – 198/10
மிஸ்பா உல் ஹக் 51, ஷான் மஷூட் 39, வஹாப் ரியாஸ் 39,
கிறிஸ் வோக்ஸ் 67/4, பென் ஸ்டோக்ஸ் 39/2
இங்கிலாந்து 98/1
எலஸ்டயர் குக் 49* ஜோ ரூட் 23*
முஹமத் அமீர் 36/1
இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 489 ஓட்டங்களால் முன்னிலையில்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்