ஆறுதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்

536
@AFP

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் நேற்று நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 23 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரூட் 9  ஓட்டங்களையும் , தலைவர் இயன் மோர்கன் 10 ஓட்டங்களையும் பெற்று  ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு ஜேசன் ரோய் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஜேசன் ரோய் 87 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி 75 ஓட்டங்களை சேர்த்தார்.

விக்கெட் காப்பாளர்  பேர்ஸ்டோவ் 33 ஓட்டங்களையும்  ஜோர்டன் 15 ஓட்டங்களையும்  சேர்க்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 302 ஓட்டங்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 4 விக்கட்டுகளையும், முஹமத் ஆமீர் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 303 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்று 10 பந்துகள் மீதமிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக விக்கட் காப்பாளர் சர்ப்பிராஸ் அஹமத் 90 ஓட்டங்களையும், சுஹைப் மலிக் 77 ஓட்டங்களையும் முஹமத் ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் அசார் அலி 33 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் வூட் மற்றும் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தி இருந்தார்கள். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சர்ப்பிராஸ் அஹமத் தெரிவு செய்ப்பட்டதோடு  போட்டித் தொடரின் நாயகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 302/9 (50)
ஜேசன் ரோய் 87, பென் ஸ்டோக்ஸ் 75, ஜோனி பெயர்ஸ்டோவ் 33
ஹசன் அலி 60/4, முஹமத் அமீர் 50/3

பாகிஸ்தான் – 304/6 (48.2)
சர்ப்பிராஸ் அஹமத் 90, சுஹைப் மலிக் 77, முஹமத் ரிஸ்வான் 34*, அசார் அலி 33
மார்க் வூட் 56/2, டௌசன் 70/2

பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி