பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

190
AFP

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் அணியினை 80 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கின்றனர்.

அதோடு, அவுஸ்திரேலியா இந்த வெற்றியுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினையும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலியா

பாகிஸ்தான் …….

நேற்று (27) அபுதாபியில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் அவரது 20ஆவது ஒரு நாள் அரைச்சதத்தோடு 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 90 ஓட்டங்களை குவித்திருந்தார். இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் கடந்த பின்ச், தனது மூன்றாவது தொடர்ச்சியான சதத்தினை வெறும் 10 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் மத்திய வரிசையில் துடுப்பாடிய கிளேன் மெக்ஸ்வெல் 55 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, பீட்டர் ஹேன்ஸ்கொம்ப் 47 ஓட்டங்களை குவித்திருந்தார்.

பட்லரின் ஆட்டமிழப்பை வைத்து விழிப்புணர்வை ஆரம்பித்த பொலிஸார்

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ….

மறுமுனையில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக உஸ்மான் சின்வாரி, ஜுனைட் கான், யாசிர் சாஹ், இமாத் வஸிம் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 267 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.

தொடர்ந்து பாகிஸ்தான் அணி,  44.4 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 186 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் 80 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.  

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் இமாம்-உல்-ஹக் 46 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, இமாத் வஸிம் 43 ஓட்டங்களுடன் ஆறுதல் தந்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான  அடம் ஷேம்பா 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்க்க, பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரணம்

இப்போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் தாம் விளையாடிய அடுத்த ஒருநாள் தொடரினையும் பறிகொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின்  ஆட்ட நாயகன் விருதினை அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் பெற்றுக் கொண்டார். அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இந்த தொடரின் நான்காவது போட்டி, வெள்ளிக்கிழமை (29) டுபாய் நகரில் இடம்பெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 266/6 (50) ஆரோன் பின்ச் 90, கிளென் மெக்ஸ்வெல் 71, பீட்டர் ஹேன்ஸ்கொம்ப் 47, இமாத் வஸிம் 34/1

பாகிஸ்தான் – 186 (44.4) இமாம்-உல்-ஹக் 46, இமாத் வஸிம் 43, அடம் ஷேம்பா 43/4, பேட் கம்மின்ஸ் 24/3

முடிவு – அவுஸ்திரேலிய அணி 80 ஓட்டங்களால் வெற்றி


>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<