டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

289

நேற்று (26) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 கைப்பற்றியது.

முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த வகையில் அவ்வணி தமது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கடந்த முதலாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சுஹைப் மலிக் அணியில் இணைத்துக்கொள்ள பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் முதலாவது டி20 போட்டியில் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 45 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 40 ஓட்டங்களையும் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்ததனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக கௌடர் நைல் மூன்று விக்கெட்டுகளையும் பில்லி ஸ்டேன்லேக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

டி20 தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கில் 148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கடந்த போட்டியை போன்றே அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் வெற்றிக்காக போராடிய கிலென் மெக்ஸ்வல் மற்றும் கௌடர் நைல் ஜோடி கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருவரும் தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

மெக்ஸ்வல் 37 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் கௌடர் நைல் 27 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்ததோடு இமாத் வசீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர். இத்தொடர் வெற்றியானது சப்ராஸ் அஹமட் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 10 ஆவது சர்வதேச டி20 தொடர் வெற்றியாகும்.

இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா

இப்போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இமாத் வசீம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இவர் முதலாவது போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச டி20 போட்டி நாளை (28) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 147/6 (20) – பாபர் அசாம் 45, மொஹமட் ஹபீஸ் 40, கௌடர் நைல் 18/3, பில்லி ஸ்டேன்லேக் 36/2

அவுஸ்திரேலியா – 136/8 (20) – க்லென் மெக்ஸ்வல் 52, கௌடர் நைல் 27, சதாப் கான் 30/2, ஷஹீன் அப்ரிடி 35/2, மொஹம்ட ஹபீஸ் 4/1, இமாத் வசீம் 8/1

முடிவு – பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<