அவுஸ்திரேலியாவை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்

283
Image Courtesy - Getty Images

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்களால்  இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிகெட் அணியுடன் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று (24) அபுதாபி நகரின் ஷேக் சயிட் மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டாவது டெஸ்டை வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் …..

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி  களத்தடுப்பை தெரிவு செய்தது.  இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டுக்காக 32 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஃபகர் சமான் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ஹபீஸ் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் 73 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது ஹபீஸ் 39 ஓட்டங்களுடன் வெளியேற அடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றிருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பில்லி ஸ்டேன்லேக் மற்றும் அன்ட்ரு டை ஆகிய இருவரும் 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

 உலகின் முதல்தர டி20 அணியான பாகிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட சவாலான வெற்றியிலக்கை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ் மற்றும் டார்சி ஷோட் ஆகிய இருவரையும் முதலாவது ஓவரிலே கைப்பற்றி அசத்தியிருந்தார் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் இமாத் வஷீம்.

விறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற …

தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. எனினும், 7ஆவது விக்கெட்டுக்காக இணைந்த பந்து வீச்சாளர்களான அஷ்டன் அகார் பற்றும் கௌடர் நைல் ஆகியோர் 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணி படுமோசமான தோல்வியில் இருந்து மீட்கப்பபடது. இறுதியில் அவ்வணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலி அணி சார்பாக  கௌடர் நைல் மற்றும் அஷ்டன் அகார் ஆகியோர் முறையே 34 மற்றும் 19 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் இமாத் வஷீம் 3 விக்கெட்டுகளையும் பஹீம் அஷ்ரப் மற்றும் ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இமாத் வஷீம் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி நாளை (26) நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 155/8 (20) – பாபர் அசாம் 68*, மொஹமட் ஹபீஸ் 39, ஹசன் அலி 17*, பில்லி ஸ்டேன்லேக் 21/3, அன்ட்ரு டை 24/3

அவுஸ்திரேலியா அணி – 89 (16.5) – கௌடர் நைல் 34, அஷ்டன் அகார் 19, இமாத் வஷீம் 20/3, பஹீம் அஷ்ரப் 10/2, ஷஹீன் அஃப்ரிடி 23/2

போட்டி முடிவு : பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்களால் வெற்றி.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<